சின்னம்மா வந்தாச்சு.. தென்காசியில் குதூகலமான மாஜிக்கள்! சசிகலாவுக்கு வெற்றிப் பயணமா? வெற்றுப் பயணமா?
தென்காசி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வெளிப்படையான அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். தென்காசியில் 'அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடங்கியிருக்கும் அவருக்கு, இது வெற்றி பயணமாக அமைந்ததா? அல்லது வெற்றுப் பயணமாக அமைந்ததா? என்பது குறித்துப் பார்க்கலாம்..!
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டது. நேற்று தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவன் நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி புதன்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு தென்காசி ஒன்றியம், காசிமேஜர்புரத்திலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து தென்காசி, கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்தார். 20ஆம் தேதி வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் சகோதரரான திவாகரன் தான் அம்மாவின் வழி மக்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தை போல ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் அமைத்து அதிக அளவில் நிர்வாகிகளை அழைத்து வர உத்தரவிடப்பட்டது. இது மட்டுமல்லாமல் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரனின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டனர். இந்த திட்டம் ஓரளவு கைதுகொடுத்துள்ளதாகவே கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். குற்றாலம் காசிமேஜர்புரத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய வேனில் தனது முதல் நாள் பயணத்தை தொடங்கினார் சசிகலா.
தொடர்ந்து இலஞ்சி, தென்காசி புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பேசினார். 'எம்ஜிஆர் கட்சி துவங்கியது ஏழை எளிய மக்களுக்காக தான். பிறகு ஜெயலலிதாவும் எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்தார். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், என்கிட்ட நடக்காது. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து 2026ல் அதிமுக ஆட்சி உருவாக பாடுபட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே" என சசிகலா பேச உற்சாகமான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
அதேபோல சசிகலாவின் பேச்சின் பெரும் பகுதி திமுகவை குறி வைத்தே இருந்தது. "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியில் மேடைக்கு மேடை வெற்று அறிவிப்புகள் மட்டுமே வருகிறது. மூன்று முறை முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர் வெளிநாடு செல்வதில் தவறில்லை. ஆனால் வெளிப்படையாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு நாள் கூட வெளிநாடு சென்றதில்லை. திமுக ஆட்சியில் நிர்வாக திறமை இல்லை" என திமுகவை குறி வைத்தே சசிகலாவின் பேச்சு இருக்கிறது.
அதிமுக நிர்வாகிகள் யாரையும் அவர் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ விமர்சித்துப் பேசவில்லை. கட்சி ஒன்று சேர வேண்டும் என்று மட்டுமே பேசி வருகிறார். அதே நேரத்தில் கடந்த முறை திருவள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை விட தற்போது சசிகலாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், நிச்சயம் 2026 இல் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்போம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சசிகலாவின் பயணம் வெற்றிப் பயணமாக அமையும் வெற்றுப் பயணமாக அமையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வந்து விடும்.












Click it and Unblock the Notifications