• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மு.க.ஸ்டாலின்.. சறுக்குவாரா? சாதிப்பாரா?

|
  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின்- எதிர்பார்ப்புடன் உடன்பிறப்புகள்- வீடியோ

  - ராஜாளி

  சென்னை: திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இன்று முடிசூடப்பட்டுள்ளார் ஸ்டாலின். இறக்கும்வரை தான் ஏற்றுக்கொண்ட தலைவர் பதவிக்கு நியாயம் செய்தவர் கருணாநிதி. திமுகவில் இதுவரை நடைபெற்ற உட்கட்சி தேர்தல்களில் 4 முறை பொது செயலாளராக அண்ணா தேர்வு செய்யப்பட்டார் அதன்பிறகு நடைபெற்ற அத்தனைத் தேர்தல்களிலும் கருணாநிதியே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான பலனையும் அந்த இயக்கம் கண்டது.

  ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி கட்டுப்பாடுடன் தனது தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ளுமா என்றால் உலக அளவில் அதற்கான பதில் பெரும்பாலும் இல்லை என்றே வரும். இப்படிப்பட்ட சூழலிலும் தனது தொண்டர்படையை கோழி தனது குஞ்சுகளை பாதுகாப்பது போல பாதுகாத்து வந்தவர் கருணாநிதி. திமுகவிலிருந்து எம் ஜி ஆர் பிரிந்தபோதும் சரி, 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் வனவாசம் அனுபவித்த போதும் சரி, அதற்குப் பிறகு வைகோ பிரிந்து சென்றபோது கட்சி செங்குத்து பிளவை சந்தித்தபோதும் சரி கட்சியை தளரவிடாமல் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் கருணாநிதி என்றால் அதற்கு இரண்டு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது அவரை எதிர்த்து அரசியல் செய்வோரும் ஒத்துக்கொள்ளும் சங்கதி.

  இன்று இந்த நிலையில் அதாவது திமுக தலைவர் கருணாநிதி இல்லாத நிலையில் தி.மு.க வின் தலைவர் என்ற மாபெரும் பொறுப்புக்கு வரவிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கும் பொறுப்பு அத்தனை எளிதாக இருக்குமா ஸ்டாலினுக்கு? சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்ற கேள்விகள் பொதுமக்களிடம் மட்டுமல்ல, அவரை நன்கறிந்த உடன்பிறப்புகளிடமும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

  Will Stalin deliver as DMKs president?

  கருணாநிதி மட்டும் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்திருந்தால்? கருணாநிதி மட்டும் இருந்திருந்தால்?

  இப்போதைய நிலையில் இந்த கேள்விகள் ஸ்டாலினின் முன் உள்ள ஆகப்பெரிய சவால். எப்போது கருணாநிதி உடல்நலிவுற்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே இந்த கேள்விகள் ஸ்டாலினை துரத்த ஆரம்பித்து விட்டன. இது அனைத்து இடங்களிலும், ஆகச்சிறந்த ஆளுமைகளுக்குப் பிறகு வரும் அத்தனை நபர்களும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனை. இதை எப்படி அவர் கையாளுகிறார்? எப்படி அதை கடந்து செல்லவிருக்கிறார் என்பதை பொறுத்தே அவரது திறன்கள் தீர்மானிக்கப்படும். கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே திமுகவை ஸ்டாலின் வழிநடத்தியிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இந்த இயக்கத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் திமுகவின் திசைகளை தீர்மானித்து வருகிறார். அன்றிலிருந்தே இந்த கேள்வியும் அவரைத் துரத்த ஆரம்பித்துவிட்டன. காரணம் அவரது தலைமையில் திமுக படை வெற்றிகளை தனதாக்கவில்லை. அதனால் தளபதிக்கு நல்ல பெயரும் கிட்டவில்லை, நியாயமாக இந்த தருணத்தில் மட்டும் கருணாநிதி இருந்திருந்தால் என்ற ஆதங்கம் மிஸ்டர் பொதுஜனத்திற்கும், அவரது உடன்பிறப்புகளுக்கும் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. அண்ணா இறந்தபோதும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரவே செய்தன. ஆனாலும் தனது சாதுரியத்தால் அனைத்தையும் வென்று காட்டினார் கருணாநிதி. ஆனால் ஸ்டாலினின் முன்பு அதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தபோதும் சறுக்கிக் கொண்டே வந்திருக்கிறார்.

  அழகிரி வடிவில் ஆபத்து

  கருணாநிதி உயிரோடு இருந்தபோதே ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் அழகிரி. இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். இன்று ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக சொல்லி பீதியை கிளப்பியிருக்கிறார். திமுக நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதிலிருந்து ஆரம்பித்து பதவிகள் விற்கப்படுகின்றன என்ற குற்றசாற்றுகளை கூறியிருக்கிறார். இந்த குற்றசாற்றுகளுக்கு ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் உடன்பிறப்புகள் மத்தியில் குறிப்பாக பதவி கிடைக்காதவர்களுக்கு "அழகிரி அண்ணன் உண்மையத்தானே சொல்றாரு" என்ற ஆதரவுக் குரல் கேட்க தொடங்கிவிட்டது. அதற்கேற்றார்போல அழகிரியும் அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்கு அவரே நேரடியாக அலைபேசுகிறார். பேரணிக்கு பெரும் ஆதரவை வேண்டுகிறார். திமுகவில் தன்னை சேர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் அழகிரியை ஸ்டாலின் கட்சியில் சேர்த்தாலும் சிக்கல், இல்லையென்றாலும் சிக்கலோ சிக்கல். அழகிரியை சேர்த்துக் கொண்டால் கட்சிக்குள் இரட்டைத்தலைமை என்ற நிலை உருவாகிவிடும். அது பெரும் குழப்பத்தை உருவாக்கும், அதோடு இவ்வளவு நாட்களாக அழகிரியை எதிர்த்து அரசியல் நடத்திய ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அஸ்திவாரமே ஆட்டம் காணலாம். சரி கட்சியில் அவரை சேர்க்கவே இல்லை என்றால் நிலைமை சரியாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை.

  திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் இடைதேர்தல் வரவிருக்கிறது. R.K நகர் இடைதேர்தலில் தினகரனிடமே டெப்பாசிட்டை பறிகொடுத்தார் செயல்தலைவர். ஆக இடைதேர்தல் எக்ஸ்பெர்ட் ஆன அழகிரி திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் ஸ்டாலினுக்கு பெரும் திருகுவலியாக இருக்கப் போவது நிச்சயம். அடுத்த சவாலும் குடும்பத்திலிருந்தே வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழியும் கட்சியில் முக்கிய பதவியை எதிர்நோக்குகிறார். தென் மாவட்டங்களில் அவருக்கென்று ஆதரவாளர் படையும் இல்லாமல் இல்லை. மனதளவில் அழகிரி அண்ணனை ஆதரிக்கும் கனிமொழியின் கணைகள் எந்நேரம் வேண்டுமென்றாலும் ஸ்டாலினுக்கு எதிராக் திரும்ப வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனும் தனக்குரிய தகுதியான பதவி கட்சியில் வேண்டுமென எதிர்பார்க்கிறார். இப்படி மூவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் அளித்தால் அது ஸ்டாலினுக்கு கட்சியில் எதிர்மறையான இமேஜை உருவாக்கும்.

  Will Stalin deliver as DMKs president?

  தேர்தல் களம்

  2011 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதுவும் குறிப்பாக தளபதியின் வியூகத்தின்படி நடைபெற்ற தேர்தலில் படு தோல்வி, அதற்கு அடுத்து வந்த 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வி என்று அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் திமுகவுக்கு அடுத்து வரும் தேர்தலில், அது இடைதேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ அல்லது நாடாளுமன்ற தேர்தலோ எது வந்தாலும் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம். இந்த தேர்தல்களில் தனது படை பரிவாரங்களை எப்படி வழி நடத்தப் போகிறார் என்பதில் அடங்கியிருக்கிறது ஸ்டாலினின் திறமை. ஏற்கனவே கடந்த தேர்தல்களில் ஒன்று முதல் 1.5% வாக்குகளில் தோல்வியைத் தழுவியது திமுக. அதிமுக, பாஜக கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கும் கலையில் ஸ்டாலின் தேர்வானால் மட்டுமே இது சாத்தியம்.

  வரும் தேர்தலில் 7 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுகவை எதிர்த்தே தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் வியூகம் வகுக்கப் போகின்றன. பண பலம், ஆட்சி அதிகாரம், தேர்தல் ஆணைய உத்திகள் இவற்றோடு அதிமுகவும், பாஜகவும் களம் இறங்கும். பா.ம.க., கமல், ரஜினி போன்றவர்களும் திமுகவுக்கு எதிராகவே கம்பு சுற்றுவார்கள். இவர்களை சமாளிக்க ஸ்டாலின் அமைக்கப் போகும் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பதில் அடங்கியிருக்கிறது அவரது வெற்றி சூத்திரம்.

  சமீப காலமாக திமுகவுடன் பாஜக காட்டும் நெருக்கம், பாஜக எதிரிக் கட்சி அல்ல எதிர் கட்சிதான் என்று கூறியிருக்கும் துரைமுருகனின் கூற்று, திராவிடத் தலைவனின் புகழ்வணக்கக் கூட்டத்திற்கு சனாதன தலைவரை அழைத்தது, அதற்கு அவர் வரமாட்டேன் என்று இப்போது சொன்னது இது எல்லாமே ஸ்டாலினுக்கு நிச்சயம் பெரும் சறுக்கல்தான். ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும் ஏறவிருக்கின்ற மேடை தேசியத்தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய மேடை என்பது நிச்சயம் ஸ்டாலினுக்கு பெருமைதான் அதே வேளையில் அமித்ஷா பங்கேற்காமல் அவருக்கு பதிலாளை அனுப்பியிருப்பது சின்ன சறுக்கல்தான். ஆக அமித்ஷாவை இந்த தருணத்தில் அழைத்து ஸ்டாலின் தனக்குத் தானே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.

  பெயர் சொல்லி அழைக்கும் கருணாநிதி

  கருணாநிதி எந்த ஊருக்கு சென்றாலும், எந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அந்த ஊரின் முக்கியத்தலைவர்களில் தொடங்கி மாவட்டச் செயலாளர், பிற நிர்வாகிகள் என்று அனைவரின் பெயர்களையும் தனது உரையில் உரைக்கத் தவறியதே இல்லை. மாவட்டத்துக்குள் எத்தனைப் பிரிவுகளாக பூசல்கள் இருந்தாலும் அவர்களை அரவணைக்க கருணாநிதி எப்போதும் தவறியது இல்லை. இதனால்தான் கட்சி பெரும் அதிர்வுகளை சந்தித்த போதும் அதன் கட்டமைப்புக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் காத்துக் கொண்டார் கருணாநிதி. ஆனால் சில அதிகார மையங்களை தாண்டி தொண்டர்களால் மட்டுமல்ல கீழ்மட்ட நிர்வாகிகளால் கூட ஸ்டாலினை நெருங்க முடிவதில்லை. அவர்களை நெருங்க வேண்டுமென ஸ்டாலினும் நினைப்பதில்லை. இந்நிலையில், தன்னிலையை ஸ்டாலின் நிச்சயம் மாற்றியே ஆகவேண்டும் என்று எதிர்நோக்குகிறார்கள் உடன்பிறப்புகள். இதில் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறும் பட்சத்தில் அழகிரி அணியின் பலம் "ஆனை" பலமாகும் ஆபத்து அதிகம். இவைகளை தாண்டி சாதி அரசியல், இளைஞர்களை ஈர்ப்பது, சமூக வலைதளங்களில் இன்னமும் ஆக்கப் பூர்வமாக இயங்குவது என்பதையும் ஸ்டாலின் கைகொள்ள வேண்டும்.

  Will Stalin deliver as DMKs president?

  ஸ்டாலினின் பலம்

  ஸ்டாலின் இன்று ஏற்கப்போகும் பதவி மு.க என்ற முன்னெழுத்துகளை கொண்டிருப்பவர் என்பதால் மட்டுமே அவருக்கு கிடைத்துவிடவில்லை. மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் களமாடியவர். தொடர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சியில் ஒவ்வொரு படிநிலைகளாகவே முன்னேறியிருக்கிறார். ஆட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என ஆட்சியிலும் படிப்படியாகவே முன்னேறி வந்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு அடுத்த இடத்தில் ஸ்டாலினை வைத்து அழகு பார்க்கும் விதத்தில் தனது தகுதிகளை ஸ்டாலின் வளர்த்துக்கொண்டுள்ளார். மேயராக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாகவே நிருபித்துள்ளார் என்பது அப்போது அவரோடு பணியாற்றிய அதிகாரிகள் கொடுக்கும் நற்சான்று. கட்சிப் பணியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை நிருபித்தப் பிறகே இந்த இடத்தை இன்று அடையப்போகும் ஸ்டாலினின் தனித்துவ பண்புகள் சமீப காலமாக நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சென்று பார்த்தது, அவர் இறந்தபோது முதல் தீர்மானமாக இரங்கல் தீர்மானம் இயற்றியது, விமர்சனங்கள் இருந்தாலும் நமக்குநாமே பயணம் மேற்கொண்டு தொண்டர்களோடு நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது நிச்சயமாக சாதகமான அம்சமே.

  கட்சியில் உள்ள தனது தொண்டன் ஒருவன் பிரியாணி கடையில் செய்த தகராறுக்காக நேரடியாக சென்று வருத்தம் தெரிவித்தது, உங்களில் ஒருவன் என்று முரசொலியில் கடைகோடி தொண்டனுக்கும் நெருக்கமாக கடிதம் எழுதுவது, கருணாநிதி தமிழகத்திற்கு பொதுவானவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பப்ட்டிருந்தபோது அவரது நிலையை தொண்டருக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த அவரது புகைப்படங்களை வெளியிட்டது என்று தனது ஆளுமையை கிடைக்கும் இடத்தில் எல்லாம் அழகாக வெளிப்படுத்தி வரும் ஸ்டாலின் கருணாநிதியை விட சிறப்பாக செயல்படுகிறாரே என்று ஊரும் தொண்டர்களும் கூறும் வகையில் வரவேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஸ்டாலினிடம் இப்போது எதிர்பார்ப்பது. செய்வாரா ஸ்டாலின்?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  lok-sabha-home

   
   
   
  English summary
  மு.க.ஸ்டாலின்.. சறுக்குவாரா? சாதிப்பாரா? MK Stalin has been selected as the new President of DMK and both the cadres and People have high expectations on him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more