தஞ்சாவூரில் ரேஷன் வாங்க போன அட்டைதாரர்கள்.. ரேசன் கடையில் அது பாட்டுக்கு போகுதாம்.. ஒன்னுமே புரியல
தஞ்சாவூர்: சமீபகாலமாகவே குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைந்துவிடுவது அதிகரித்து வருகிறது.. வனத்துறையினருக்கோ அல்லது பாம்பு பிடிவீரர்களுக்கோ தகவல் தந்து வரவழைப்பதற்குள், பாம்பு கடித்து உயிரிழப்புகளே நடந்துவிடுகின்றன.. அந்தவகையில், தஞ்சாவூரிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பாம்பு நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது.. செம்பட்டி அருகே வேலகவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் பீமராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவரது 5 வயது மகன் கண்ணன், அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.

சம்பவத்தன்று, செம்பட்டி அருகே உள்ள தன்னுடைய தாத்தாவின் குடிசை வீட்டில் கண்ணன் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென பாம்பு கடித்துவிட்டது. இதனால் கண்ணன் அலறி கத்தியிருக்கிறான். அப்போது கண்ணனின் வாயிலிருந்து நுரையாய் தள்ளியிருக்கிறது. உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் , பலனின்றி சிறுவன் கண்ணன் பரிதாபமாக இறந்துவிட்டான்.
ரேஷன் கடையில்
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தஞ்சாவூரில் மற்றொரு பரபரப்பு நடந்துள்ளது.. தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.. இங்குள்ள திருமண மண்டபத்துக்கு பக்கத்திலேயே இந்த கடை இயங்கி வருகிறது.. 3,000க்கு மேற்பட்ட அட்டைதாரர்கள், இங்குதான் ரேஷன் வாங்கி செல்வார்கள்.
நேற்று காலை ரேஷன் கடை ஊழியர்கள் வழக்கம்போல் காலை 9 மணிக்கு கடையை திறந்தனர்.. ஆனால், முன்கூட்டியே ரேஷன்தாரர்கள் பலர், திரண்டு வந்து வரிசையில் காத்திருந்தனர்.. அப்போது ஊழியர்கள் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதற்கு முன்பு, எடை போட்டு சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொப்பென விழுந்த பாம்பு
அப்போது திடீரென சோப்பு, டீ தூள் அடுக்கி வைத்திருந்த அலமாரியிலிருந்து தொப்பென ஒரு பாம்பு உயிருடன் தொங்கியது.. இதைப்பார்த்து ஊழியர்களும், கடைக்கு வந்த ரேஷன்தாரர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியேறி ஓடினார்கள்.. பிறகு உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரேஷன் கடைக்குள் நுழைந்து பாம்பை பிடிக்க முயன்றனர்.. ஆனால், அதற்குள் அந்த பாம்பு மாயமாகிவிட்டது. கடை முழுக்க சல்லடை போட்டும் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை..
மீளமுடியாத அதிர்ச்சி
பிறகு காலி சரக்குகளை வைக்கும் அறையின் கதவில் ஒரு ஓட்டை இருந்தது.. அந்த ஓட்டை வழியாக பாம்பு, அறைக்குள் சென்றிருக்கும் என்று நினைத்து, அங்கு சென்று தேடினார்கள்.. அப்போது காலி சரக்குகளுக்கு மத்தியில் சுருண்டு கிடந்த பாம்பை கண்டுபிடித்தனர்..
கிட்டத்தட்ட 10 அடி நீளம் கொண்ட அந்த சாரைப்பாம்பினை, ஊழியர்கள் பிடித்து, பத்திரமாக எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.. இந்த பரபரப்பு காரணமாக, ரேஷன் ஊழியர்களும், கார்டுதாரர்களும் சிறிது நேரம் அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை.. இதற்கு பிறகுதான் மெல்ல இயல்பு நிலைமைக்கு திரும்பி, ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர்.












Click it and Unblock the Notifications