உன் பேரு சிராஜுதீனா.. அப்ப நீ அப்படிதான் பேசுவ! சீமானின் அடுத்த சர்ச்சை பேச்சு -நாம் தமிழர் விளக்கம்
தஞ்சாவூர்: சிராஜுதீன் என்ற பத்திரிகையாளரின் பெயரை கேட்டு நீ அப்படிதான் பேசுவாய் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து அக்கட்சி நிர்வாகி விளக்கமளித்து இருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2 திராவிட கட்சிகளும் வேண்டாம் என்பவர்கள் என்னுடன் கூடுகிறார்கள். திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் என் பின்னால் திரள்கிறார்கள்." என்றார்.

அப்போது செய்தியாளர், "ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் வாக்கு மட்டும் வாங்கினால் போதுமா சார்" என அந்த செய்தியாளர் கேட்க, சீமானோ, "ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் ஓட்டு வாங்கி இருக்கேனே.. நீங்கள் தூக்கில் தொங்குவீர்களா? 35 ஆயிரம் ஓட்டு வாங்கி இருக்கேன் தூத்துக்குடியில். விஷம் குடிக்கின்றீர்களா? 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள். நான் தீக்குளிக்கிறேன். எந்த இதழில் வேலை செய்கிறீர்கள்?" என கேட்டார்.
அந்த செய்தியாளர் தான் பணிபுரியும் இதழின் பெயரை சொன்னவுடன், அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டதா என்று சொல்லி, உங்கள் பெயர் என்ன என்று அந்த பத்திரிகையாளரிடம் வினவினார். "சிராஜுதீன் சார்" என அந்த பத்திரிகையாளர் சொன்னவுடன், "அப்ப நீ பேசுவ" என ஒருமையில் பதிலளித்தார்.
சீமான் இவ்வாறு பேசியதை தொடர்ந்து அந்த பத்திரிகையாளருக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் அந்த பத்திரிகையாளரை ஒருமையில் அவமரியாதையாக பேசினார். "நீ கோமாவில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உன் பேரு சிராஜுத்தீனா?" என மீண்டும் சீமான் பேசினார்.
இந்த நிலையில் சீமான் பத்திரிகையாளரின் பெயரை கேட்டவுடன் மதரீதியில் விமர்சித்ததாக இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதில், "இன்று கும்பகோணத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிராஜுதீன் என்கின்ற ஒரு பத்திரிகையாளர் வீணான குழப்பங்கள் மற்றும் அண்ணன் சீமான் அவர்களை அவமரியாதைப் படுத்தும் கேள்விகளோடு வருகிறார் என பத்திரிக்கையாளர் நண்பர்களிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்தது.
அவரது பெயர் பற்றி ஏற்கனவே அண்ணனிடம் எச்சரித்து இருந்தோம். உயர்ந்த ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் பணி புரியும் மேற்கண்ட நபர் நாம் தமிழர் கட்சி வளரவில்லை என்றெல்லாம் பத்திரிக்கையாளர் போர்வையில் குழப்பங்கள் உண்டாக்கும் விதத்தில் கேள்வி கேட்டது சக பத்திரிக்கையாளர்கள் எச்சரிக்கை செய்ததை உறுதி செய்தது.
அண்ணன் சீமான் எதிர்த்தது சிராஜுதீன் என்கின்ற தனி நபரை மட்டுமே. இதற்கு வழக்கம் போல திராவிடக் கும்பல் மத அடையாள அரசியல் பூசுவது இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை இத்தருணத்தில் காட்டுகின்றது.
இந்த சிராஜுதீன் என்பவர் திமுக கூட்டணி வைத்திருக்கும் ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர் என்பதும் தெரிய வருகிறது. அண்ணன் சீமான் எதிர்த்தது சிராஜுதீன் என்கின்ற தனி நபரை மட்டுமே. ஒட்டுத் திண்ணைகள் அறிவாலயத்தில் சென்று பிழைக்க வேறு வேலைகள் இருந்தால் அதை பார்க்கவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications