ஆப்பாயில் போட இவ்வளவு லேட்டா? போதையில் ஓட்டலை சூறையாடிய போலீசார் - சஸ்பெண்ட் செய்த எஸ்.பி
தஞ்சாவூரில் ஆப்பாயில் போட தாமதமானதால் போதையில் ஓட்டலை சூறையாடியுள்ளனர் இரண்டு காவலர்கள்.இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
தஞ்சாவூர்: ஆப்பாயில் போட லேட்டானதால் போதையில் கலாட்டா செய்து ஹோட்டலில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடியுள்ளனர் இரண்டு காவலர்கள். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கலாட்டா செய்த காவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா.
ஆப்பாயில் கேட்டு கலாட்டா செய்த காவலர்களின் பெயர் பாலசுப்ரமணியன், அருண்குமார் என்பதாகும். இதில் பாலசுப்ரமணியன் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியில் வசித்து வருகிறார். ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பாலசுப்ரமணியன், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் குமாருடன் இணைந்து ஹோட்டலுக்கு சென்றார்.
இவர்கள் இருவருடனும் அவர்களின் விஜி என்பவரும் சென்றிருந்தார். மூவரும் நாஞ்சி கோட்டை சாலையிலுள்ள ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான சங்கீதா ஹோட்டலில் இரவு சாப்பிட்டனர். அப்போது ஆப்பாயில் ஆர்டர் செய்திருந்தனர்.

கை கலப்பு
ஆப்பாயில் வர தாமதமாகவே மூவரும் ஆத்திரமடைந்தனர். ஹோட்டலில் சப்ளை செய்து வந்த 15 வயதான ஹரீஸ் சிறுவனை திட்டியுள்ளனர். அவர் ஹோட்டல் உரிமையாளர் ராம்குமாரின் மகனாவார். மகனை திட்டுவதைப் பார்த்த ராம்குமார் மூவரையும் தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்தினார். வாய்பேச்சு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அதிகரிக்கவே, மூவரும் ஹோட்டலில் உள்ள நாற்காலிகளை வீசி உடைத்தனர்.

சிறுவன் மீது சாம்பார்
ஹோட்டலில் பொருட்களையும் எடுத்து வீசி சூறையாடினர். இந்த சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் மனைவியின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. சாம்பாரை எடுத்து சப்ளை செய்த சிறுவனின் தலையில் கொட்டினர். இதில் தலையில் இருந்து உடை முழுவதும் குழம்பு கொட்டியது.

மருத்துவமனையில் சிகிச்சை
மாறி மாறி பொருட்களை வீசவே காவலர் அருண்குமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

எலும்பு முறிவு
அடிதடி சம்பவத்தை அடுத்து பாலசுப்ரமணியமும், விஜியும் தப்பியோட முயன்றனர். காரை வேகமாக விஜி திருப்பிய போது, அது பாலசுப்ரமணியத்தின் மீது மோதி தொடையில் காயம் ஏற்பட்டது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவர் மீது வழக்கு
இது குறித்து காவல்நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் அவரது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதையில் சஸ்பெண்ட்
போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்பி ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விஜியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விஜி தஞ்சாவூர் தொம்பங்குடிசை பகுதியில் கார்களில் எலக்ட்ரிகல் வேலைகளைச் செய்யும் எலக்ட்ரீசன் ஆவார். ஒரு ஆப்பாயிலுக்கு இப்படி ஒரு அக்கப்போரா? என்று கேட்டு வருகின்றனர் தஞ்சாவூர் மக்கள்.












Click it and Unblock the Notifications