தேனியில் கனரா வங்கி வழங்கும் மகத்தான வாய்ப்பு.. எல்லாமே இலவசம்.. பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகில் கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிராமப்புறத்தை சேர்ந்த பெண்களுக்கு அழகுக்கலை மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளன. இந்த பயிற்சி வருகிற 19-ந்தேதி தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் என்பது பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளை முழுக்க முழுக்க இலவசமாக தருகிறது. விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என்றால் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற பயிற்சிக்களை அளிக்கிறது.

அதேபோல், தையல் பயிற்சி, மெழுகுவர்த்தி தயாரித்தல், சணல் பை தயாரித்தல், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் போன்ற தயாரிப்பு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. மேலும் செல்போன் பழுது பார்த்தல், இருசக்கர வாகனம் பழுது பார்த்தல், அழகு கலை (Beautician), கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பயிற்சிகள் போன்ற சேவை சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இங்கு வெறும் தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொடுக்காமல், ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது, வாடிக்கையாளர்களை எப்படிக் கையாள்வது, கணக்கு வழக்குகளை எப்படிப் பராமரிப்பது போன்ற தொழில்முனைவோர் திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கவும் உதவுகிறார்கள்,
பயிற்சி முடித்த இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கத் தேவையான வங்கி கடன்களை பெறுவதற்கு இந்த நிறுவனம் வழிகாட்டுகிறது. பயிற்சியின் முடிவில் வழங்கப்படும் சான்றிதழ், வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை அளிக்கவும் உதவி வருகிறது.
பயிற்சி காலத்தில் மாணவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய வசதிகளை இந்த நிறுவனமே இலவசமாக வழங்குகிறது. பயிற்சிகள் பொதுவாக 10 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நடைபெறும்.
தேனியில் கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ரவிக்குமார் கூறுகையில்,"தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகில் கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அங்கு கிராமப்புறத்தை சேர்ந்த பெண்களுக்கு அழகுக்கலை மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளன.
இந்த பயிற்சி வருகிற 19-ந்தேதி தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 18 வயது நிரம்பிய கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்க வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்"கனரா வங்கி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications