தேனி ஜெயில் பிரேக்.. சீவலப்பேரி பாண்டி தப்பித்த கதை தெரியுமா? ஆட்டம் காணும் தமிழக சட்டம்-ஒழுங்கு?
தேனி : 1980-களில் பாளையங்கோட்டை மத்திய சிறையின் மிக உயரமான மதில் சுவரைத் தகர்த்துக்கொண்டு சீவலப்பேரி பாண்டி தப்பியோடிய சம்பவம், பல தலைமுறைகளாக நாவல்களிலும் திரைப்படங்களிலும் பேசப்படும் ஒரு பரபரப்பான குற்றவியல் வரலாறு.
ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அதேபோன்ற அதிர்ச்சிகரமான சிறை தப்பியோட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வருவது சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

1980களில் சீவலப்பேரி பாண்டி எப்படி தப்பினார்?
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த பாண்டி, கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், சிறைக்குள் இருந்துகொண்டே தனது குடும்பத்தின் வறுமை நிலையை அறிந்தார். தனக்கு நெருக்கமான நண்பர்கள்.. தன்னிடம் குடும்பத்தை பார்த்துக்கொள்வதாக சத்தியம் செய்த நண்பர்கள்.. தனது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டதை அறிந்ததும், பழிவாங்கும் நோக்கில் சிறையை உடைத்துத் தப்ப அவர் முடிவு செய்தார்.
மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், உயரமான சுற்றுச்சுவர்கள், தீவிரக் கண்காணிப்பு கோபுரங்கள் கொண்ட பாளையங்கோட்டை சிறையின் பாதுகாப்புக் குறைபாடுகளை மிக நுணுக்கமாக நோட்டமிட்ட பாண்டி, நள்ளிரவில் சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வேகத்தில் சிறைக்காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சிறை மதிலைத் தாண்டிக் குதித்துத் தப்பினார். போலீசாரின் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னரே அவர் பிடிபட்டார். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பேசப்படும் இத்தகைய சம்பவங்கள், தற்போது மிகச் சாதாரணமாக அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.
புழல் முதல் தேனி வரை: அடுத்தடுத்து நடக்கும் தப்பியோட்டங்கள்
அதிநவீன டிஜிட்டல் கண்காணிப்பு, மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளதாகக் கூறப்படும் சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். துப்புரவுப் பணியில் இருந்த ஒரு விசாரணைக் கைதியும், சிறை அங்காடியில் வேலை பார்த்த போக்சோ குற்றவாளி ஒருவரும் அடுத்தடுத்து தப்பியது சிறைத்துறையை உலுக்கியது. இந்த விவகாரத்தில் ஒரு உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
புழல் விவகாரம் அடங்குவதற்குள், நேற்று நள்ளிரவு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையில் ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர். "சக கைதிக்கு வலிப்பு வந்துவிட்டது" என்று கூச்சலிட்டு, உதவ வந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 பேர் ஒட்டுமொத்தமாகத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் மெத்தனத்தை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களா?
குற்றவாளிகள் சிறைக் கதவுகளை எளிதில் தகர்ப்பதும், நழுவி ஓடுவதும் காவல்துறை மற்றும் உள்துறையின் கண்காணிப்பு கட்டமைப்பில் இருக்கும் பலவீனமான ஓட்டைகளையே காட்டுகிறது என்ற விமர்சனம் வலுத்து வருகிறது.
தலைநகரில் உள்ள மத்திய சிறை முதல் மாவட்ட கிளைச் சிறைகள் வரை ஒரே மாதிரியான கவனக்குறைவு வெளிப்படுவது, துறை சார்ந்த கடுமையான உத்தரவுகளோ நேரடி ஆய்வுகளோ களத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.
அரசின் கெடுபிடிகளும் நிர்வாகத்தின் பிடியும் தளர்ந்துவிட்டதாகக் கருதும் கைதிகள், தப்பியோடத் துணிகின்றனர். காவலர்களின் போதிய எண்ணிக்கை இன்மை, சிசிடிவி கண்காணிப்பில் அலட்சியம் ஆகியவற்றை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர்.
தீவிர குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் ஒரே நேரத்தில் பொதுவெளியில் தப்பியோடி சுற்றித் திரிவது மக்களின் அன்றாடப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது.
ஒரு வலிமையான ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பிப்பது என்பது மிக அரிதான நிகழ்வாக இருக்க வேண்டும். ஆனால், எளிய நாடகங்களைக் கூட சிறைத் துறையினரால் கணிக்க முடியாமல் போவதும், அடுத்தடுத்து சிறை தப்பியோட்டங்கள் பதிவாவதும் சட்டம்-ஒழுங்கு அமைப்பில் பெரும் ஓட்டை விழுந்துள்ளதையே காட்டுகிறது. கைதிகள் தப்பிய பின் நூற்றுக்கணக்கான போலீசாரை வைத்து தேடுதல் வேட்டை நடத்துவதை விட, சிறைச்சாலைகளுக்குள் பாதுகாப்பு ஓட்டைகள் உருவாகாமல் தடுப்பதே நிர்வாகத் திறனின் உண்மையான அடையாளம்.


Click it and Unblock the Notifications
