குக்கர் மாதிரி தானே என் கணவரின் முகமும் குண்டாக இருக்கிறது.. டிடிவிக்காக மனைவி அனுராதா கலகல பிரசாரம்
தேனி: தினமும் வீட்டில் குக்கரை பார்க்கும்போது டிடிவி தினகரனின் நியாபகம் வர வேண்டும் . குக்கர் மாதிரி தானே என் கணவரின் முகமும் குண்டாக இருக்கிறது என பெண்கள் மத்தியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தது கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் தேனியில் முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும் தேர்தல் தேதி நெருங்கிய நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பெண்களின் ஓட்டுகளை தனது கணவர் டிடிவி தினகரனுக்கு பெற்று கொடுக்கும் வகையில் அனுராதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை உசிலம்பட்டியில் அனுராதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கலகலப்பாக பேசி ஒட்டு சேகரித்தார். அனுராதா பேசும்போது, ‛‛என் கணவர் ஆர்கே நகர் சட்டசபை தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குக்கர் சின்னம் என்பது வெற்றி சின்னம். ஆர்கே நகரில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது குக்கர் சின்னத்திற்கான பட்டனே தேய்ந்துவிட்டது என்று அதிகாரிகள் சொன்னார்கள்.
அதேபோல் தேனி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரனை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தினமும் வீட்டில் நீங்கள் குக்கரை பார்க்கும்போது உங்களுக்கு டிடிவி தினகரனின் நியாபகம் வர வேண்டும். குக்கரை போல் தானே அவரது முகமும் குண்டாக இருக்கிறது. குக்கருக்கு போடப்படும் ஒவ்வொடு ஓட்டும் உங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஓட்டு என்பதை மறக்க வேண்டாம்’’ என பேசினார்.
என்னை எம்பியாக்குங்கள்! கட்டபொம்மன் சிலை முன்னாடி உட்காருறேன்! தங்கதமிழ்ச் செல்வன் உறுதி
டிடிவி தினகரின் முகமும் குக்கரை போல் குண்டாக இருக்கிறது என அனுராதா கூறியது அங்கிருந்த பெண்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கடந்த 2019 தேர்தலில் தேனியில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றது. ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தற்போது ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் ஓபி ரவீந்திரநாத்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே ஓ பன்னீர் செல்வம் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ளது. அவர் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். மேலும் டிடிவி தினகரனுக்காக ஓ பன்னீர் செல்வம், அவரது மகன் ஓபி ரவீந்திரநாத் தேனி தொகுதியை விட்டு கொடுத்துள்ளனர். டிடிவி தினகரன் ஏற்கனவே தேனி எம்பியாக உள்ளார். மீண்டும் அவர் தேனியில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார். தேனியில் டிடிவி தினகரனை எதிர்த்து திமுகவில் தங்க தமிழ் செல்வன், அதிமுக சார்பில் விடி நாராயணசாமி, நாம் தமிழர் சார்பில் ஜே மதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications