விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: வறுமையில் வாடுவதாக வடமாநில தொழிலாளர்கள் வேதனை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் நாடு முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருநெல்வேலி: விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் உள்ளதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை குடோன் வாடகை மற்றும் கடன் வாங்கினது அடைக்க முடியாமல் தவிப்பதாகவும் சிலை செய்து விற்பனை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலைமை நீடித்தால் குடும்பத்துடன் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
விநாயகர் சதுர்த்தியின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களில் ஒன்றிணைந்து மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையினை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் சென்று கரைத்தும் தங்கள் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்றும் வழிபடுவது வழக்கம்.

இந்துகளின் இந்த சிறப்பு வாய்ந்த பண்டிகையானது கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொண்டாட தடை விதித்தனர் இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியினை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டுமே அரசு கட்டுப்பாடு விதத்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், இதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலையினை உற்பத்தி செய்யும் வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் கேட்கும் போது நாங்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த 20 வருடமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி குடும்பமாக விநாயகர் சிலை செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி 1000 க்கும் மேற்பட்ட சிலைகளை 1 அடி முதல் 10 அடி உயரம் வரை செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சிலை வழிபாட்டிற்கு தடை விதித்துள்ளதால் விற்பனைக்காக செய்து வைத்த சிலைகள் அனைத்தும் யாரும் வாங்க வராமல் உள்ளதால் விற்பனை ஆகாமல் உள்ளது என்றும் கூறினார்.

விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் உள்ளதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை குடோன் வாடகை மற்றும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பதாகவும் இதே நிலைமை நீடித்தால் குடும்பத்துடன் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என சிலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை நம்பி வந்த எங்களை போன்ற தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் குடும்பமாக உள்ளதாகவும் எங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் இந்துக்களின் முக்கிய பண்டிகை விநாயகர் சதுர்த்தியினை தமிழக அரசு கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அனைத்து வடமாநில தொழிலாளர் குடும்பத்தினர் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலையை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் நிவாரணத்தொகை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications