மளிகை கடையில் பட்டியலின குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்காமல் தீண்டாமை.. நாட்டாமை, கடைக்காரர் கைது
தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் ஊர் நாட்டாமை, கடை உரிமையாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி கொடுமை ஒழிய பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். தீண்டாமை ஒழிய மேடை தோறும் பேசி வருகின்றனர். பல கிராமங்களில் இரட்டை குவளை முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஆங்காங்கே தீண்டாமை தலை தூக்கி வருகிறது.
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளிக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் அந்த ஊரில் இருக்கும் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அந்த கடையில் இருந்தவர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஊர் கட்டுப்பாடு
இது குறித்து வெளியான வீடியோவில் அந்த கடைக்காரர் மாணவர்களிடம் பேசும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில், "போங்க போய் உங்க வீட்ல போய் சொல்லுங்க. தின்பண்டம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. தின்பண்டம் கொடுக்க மாட்டாங்க டா. ஊர்ல கட்டுப்பாடு வந்துருக்கு என்று கூறினர். , அதற்கு ஏதும் அறியாத அந்த அப்பாவிச் சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர்.

பிஞ்சு நெஞ்சங்கள் பாதிப்பு
ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கு உங்க தெருவுல யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாதுனு சொல்லி... இனிமே இங்க யாரும் வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். போங்க என்று அந்த கடைக்காரர் கூறுகிறார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொடுஞ்செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் வேதனை
பள்ளிக்கூடத்தில் கூட மற்ற மாணவர்களை பெஞ்சில் அமர வைக்கிறார்கள், எங்களை தரையில் அமர வைக்கிறார்கள் எங்களே தரையில் அமர சொல்கிறார்கள். வழக்கம்போல நாங்கள் இந்த கடையில்தான் தின்பண்டம் வாங்கி சாப்பிடுவோம், ஆனால் இப்போது ஊர் கட்டுப்பாடு என்கிறார்கள், எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு தின்பண்டம் தரமுடியாது என கூறுகின்றனர், நாங்கள் தெருவுக்குள் நடக்கக்கூடாது என்றும் கூறுகின்றனர் என குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2 பேர் கைது மூவர் மீது வழக்குப்பதிவு
இந்த சாதி கட்டுப்பாடு போட்ட ஊர் நாட்டாமை மற்றும் அந்த கடைகாரர் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுவர்கள் தீண்டாமை விவகாரத்தில் போலீசார் ஊர் நாட்டாமையை கைது செய்துள்ளனர். அதே போல கடைக்காரர் மகேஷ்வரனை கைது செய்து கடைக்கும் சீல் வைத்தனர். இதனிடையே தீண்டாமை கொடுமை விவகாரத்தில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீண்டாமை சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு செய்த குற்றத்திற்காக முதலில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications