திமுக கவுன்சிலர்கள் திடீரென கேரள சொகுசு விடுதிக்கு ஷிப்ட்.. பரபரக்கும் நெல்லை!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியிருக்கிறது. ஆனால் மேயர் பதவி யாருக்கு என்பதில் திமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டமாக இருப்பதால் வெற்றி பெற்ற 44 கவுன்சிலர்களையும் மாவட்ட நிர்வாகி ஒருவர் கேரளாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார் என்கின்றன தகவல்கள்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. தமிழகத்தில் திருநெல்வேலி உட்பட 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது.

நெல்லை மாநகராட்சி தேர்தல்
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் திமுக மட்டுமே 44 இடங்களைப் பெற்றது. அதிமுக 4; காங்கிரஸ் 3; சிபிஎம்-1; மதிமுக 1; முஸ்லிம் லீக் 1; சுயேட்சை 1 என்பது நெல்லை மாநகராட்சி தேர்தல் முடிவுகள். இதில் சுயேட்சையாக வென்றவரும் கூட திமுகவில் சீட் கிடைக்காமல் போட்டியிட்டவர். அதனால் அவரும் திமுக ஆதரவாளராகவே கருதப்பட்டு வருகிறார்.

கஸ்டடியில் கவுன்சிலர்கள்
இந்நிலையில் மேயர் பதவிக்கான மோதல் நேற்றே நெல்லை திமுகவில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற 44 கவுன்சிலர்களையும் மாவட்ட நிர்வாகி ஒருவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறார். 44 கவுன்சிலர்களையும் மொத்தமாக அழைத்து வந்து வெற்றி சான்றிதழ்களைப் பெற வைத்தார். அதன்பின்னர் 44 கவுன்சிலர்களையும் தூத்துக்குடி மாவட்ட திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான ரிசாட்டுக்கு அழைத்து செல்கிறார் என கூறப்பட்டது.

கேரளா சொகுசு விடுதி
ஆனால் 44 கவுன்சிலர்களும் தற்போது தமிழக எல்லையில் கேரளாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். மார்ச் 4-ந் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் வரை 44 கவுன்சிலர்களும் தங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகி உறுதியாக இருக்கிறாராம். தாம் சொல்லும் நபர் மேயராக வரவேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிர்வாகி இப்படி ரிசாட் அரசியலை கையில் எடுத்திருக்கிறாராம்.

ரிசாட் அரசியல்
பொதுவாக ஆட்சியை கவிழ்க்கத்தான் ரிசாட் அரசியல் கையில் எடுக்கப்படும். தமிழகத்தில் கூவத்தூர் ரிசாட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலாவின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டனர். அங்குதான் எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதல்வராகவும் தேர்வு செய்தார். இப்போது ஒரு மேயர் பதவிக்காக திமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் ரிசாட் அரசியலில் குதித்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications