உடல் எரிந்த நிலையில்.. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபி ஜெயக்குமார் மாயமாகியுள்ளதாக அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருந்த நிலையில், கேபி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை எஸ்பி தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கேபி ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாஃப்ரின் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என்று புகாரளித்துள்ளார். இது தொடர்பாக கருத்தையா ஜாஃப்ரின் அளித்த புகாரில், கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கேபி ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் கேபி ஜெயக்குமார் ஒரு புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அதில், வீட்டு முன்பு சில நபர்கள் சுற்றி வருகிறார்கள். வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றி வருகிறார்கள் என நினைத்தோம்.
ஆனால், கொலை மிரட்டல் நோக்கத்துடன் திட்டமிட்டு சுற்றி வருவதாகவும் சில நபர்களின் பெயரை பட்டியலிட்டும் கேபி ஜெயக்குமார் புகார் அளித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கேபி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை எஸ்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் நெல்லை விரைந்துள்ளார். கேபி ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications