‘பச்சைப்பொய்’ பழனிசாமி ‘பக்கவாத்தியம்’ பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தில் கிண்டலடித்த முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளூர் : என்னதான் 'பச்சைப் பொய்' பழனிசாமியும் - 'பக்கவாத்தியம்' ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
இன்று மாலை காணொலி வாயிலாகத் தருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி" என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், " பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்!, கோட்டைக்குப் பாதை அமைத்த மாவட்டம்- இந்த திருவள்ளூர் என்றார்.

முதல்வர் பிரச்சாரம்
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "திருவள்ளூர் மாவட்டமானது பழமையான மாவட்டமாக இருந்தாலும், அதை நவீன மாவட்டமாக மாற்றியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்! திருப்பெரும்புதூரிலும், இருங்காட்டுக்கோட்டையிலும், கும்மிடிப்பூண்டியிலும் உருவாக்கப்பட்ட தொழில் வளாகங்கள் -அம்பத்தூர், மணலி, திருவள்ளூரைச் சுற்றிலும் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் - இதில் எல்லாம் பெரும்பாலானவை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான். கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் முதல்- கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலைகள்வரை, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தொடங்கியதுதான். உலோகத் தகடு முதல்- ஏ.சி. வரைக்கும் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருக்கிறோம்.

மூன்றாவது பெரிய கட்சி
இன்று திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இப்போது நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாடு போற்றும் வெற்றியை வழங்கிட மக்கள் தயாராகிவிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில், ஏராளமான வாக்குறுதிகளை இந்த ஒன்பது மாதத்திலேயே நாம் நிறைவேற்றி இருக்கிறோம். மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் அடுத்தடுத்து நிறைவேற்றப் போகிறோம். அதில் யாருக்கும் - எந்த சந்தேகமும் வேண்டாம். அதில் நாம் உறுதியோடு உள்ளோம்.'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' - இதுதான் தி.மு.க.!

பச்சைப் பொய் பழனிசாமி
தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் சொன்னதை, நித்தமும் நெஞ்சில் ஏந்தி, கொள்கை உணர்வோடு, இந்த தமிழினத்துக்காக- மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுபவன்தான் - இந்த ஸ்டாலின்! தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஒன்றை சொன்னால், அதை நிச்சயம் செய்யும்! என்னதான் 'பச்சைப் பொய்' பழனிசாமியும் - 'பக்கவாத்தியம்' ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்! ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்!

சீரழிந்த நிதிநிலை
இதை அனைத்தும், அ.தி.மு.க. அரசு நிதிநிலையை சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம்! சீரழிப்பது மட்டும்தான் 'பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனிக்குத்' தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன். இதுதான் அ.தி.மு.க. விட்டுவிட்டுப் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்!

மக்கள் நலன் காக்கும் அரசு
தி.மு.க. அரசு என்பது மக்கள்நலன் காக்கும் அரசு! உங்கள் நலன் காக்கும் அரசு! அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை களைந்து மக்களுக்கு நகைக்கடளைத் தள்ளுபடி செய்தோம்! அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வாறெல்லாம் நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது என்று கேட்டீர்கள் என்றால், எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்கான பயனாளிகள், உண்மையாக இருக்க வேண்டும்! அதுதான் அரசின் திட்டங்களில் மிகமிக அடிப்படையானது. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை பொறுப்பாக செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி இதுபோலக் கடன் பெற்றவர்களைப் பிரித்தெடுத்துவிட்டோம். அ.தி.மு.க.வினரை வைத்து செய்த நகை மோசடிக்கு, வெறும் பொட்டலத்துக்கு "ஏன் நகைக்கடன் தள்ளுபடி பண்ணவில்லை"- என்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்கிறார்கள். உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி.

விரைவில் நிதி உதவி
இவ்வாறு பல நிதி உதவிகளை வழங்கியது திமுக அரசு, விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்று சொன்னால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! உள்ளாட்சி அமைப்புகளிலும் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுங்கள். உங்கள் ஊரில், உங்களோடு இருந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்.," என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications