திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகால அறிய சிற்பங்கள் - அரசு பாதுகாக்க மரபுசார் அமைப்பினர் கோரிக்கை

திருவண்ணாமலை- வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சொரகொளத்தூர் கிராமத்தில் 8 ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ வட்சம் மற்றும் சண்டிகேஸ்வரர் சிற்பமும் , 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: சொரகொளத்தூர் கிராமத்தில் 8 ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ வட்சம் மற்றும் சண்டிகேஸ்வரர் சிற்பமும் , 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் சமீபத்திய கள ஆய்வின் பொழுது இந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் சாட்சியாய் உள்ள இக்கோயிலையும் சிற்பங்களையும் ஊர்மக்களும் , சிவன் அடியார்களும், அரசும் இணைந்து பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் , வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா ராஜசேகரனும் திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சொரக்கொளத்தூர் ஊரில் ஆய்வு செய்த பொழுது அங்குள்ள சிவன் கோவிலில் பல்லவர்கால சண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீவட்சம் சிற்பங்களும் , கோயிலின் சுவற்றில் ஆவணம் செய்யப்படாத கல்வெட்டும் ஒன்றும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் காலத்தால் சிதைந்து விட்டமையால் , அதனைப் புனர்நிர்மாணம் செய்திட பத்து வருடங்கள் முன்னர் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு , பின்னர் பல காரணங்களால் தடைப்பட்டு பாதியில் நிற்கிறது.

 சண்டிகேஸ்வர் சிற்பம்

சண்டிகேஸ்வர் சிற்பம்

இக்கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய ஸ்ரீவட்சம் மற்றும் சண்டேஸ்வரர் சிற்பமும் கண்டறியப்பட்டது. சுமார் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் ஸ்ரீவட்சம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அறியச் சிற்பமான இது சங்க காலம் தொட்டு பல்லவர்கள் காலம் வரை திருமகளைக் சிற்ப்பங்களில் சின்னமாக குறிக்கும் வழக்கம் உண்டு.

 மகாலட்சுமியின் அருள்

மகாலட்சுமியின் அருள்

இங்குள்ள ஸ்ரீவட்சம் சிற்பத்தில் வளமையின் தெய்வமாகக் குறிக்கப்படும் திருமகளுக்கு உண்டான தாமரை மலர்கள் இரண்டு பக்கமும் காட்டப்பட்டுள்ளது. திருமகளைத் தனது மார்பில் தாங்கி இருப்பதைக் குறிப்பதற்காகத் திருமால் மார்பில் ஸ்ரீவட்சம் சின்னம் சிறிய வடிவில் பொறிக்கப்படும் வழக்கம் இன்றும் சிற்பக்கலையில் உள்ளது.

 சண்டேஸ்வர நாயனார் சிற்பம்

சண்டேஸ்வர நாயனார் சிற்பம்

இதனருகே இதே மூன்ற அடி உயரமும் இரண்டடி அகலமும் உடைய பலகை கல்லில் வலது கையில் மழுவேந்தியும் இடது கையை தனது தொடையில் ஊன்றியும் , ஒரு காலை மடித்து இருக்கையில் அமர்த்தி , மறுகாலைக் கீழிறக்கிய நிலையில் பாதங்களை பக்கவாட்டில் வைத்து சுகாசனத்தில் புடைப்பு சிற்பமாக சண்டேஸ்வர நாயனார் சிற்பம் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும் , காதுகளில் பனையோல குண்டலமும் , கழுத்தில் சரப்பளியும் அணிந்துள்ள இச்சிற்பத்தின் முகம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இவ்விரு சிற்பங்களின் காலமும் 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவர்களின் காலமாகும்.

 கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள்

இவ்விரு பல்லவ சிற்பங்களைத் தவிர்த்து இக்கோவிலில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த லிங்கம் , அம்மன் , சண்முகர் மற்றும் பைரவர் சிலைகளும் காணக்கிடைக்கிறது. மேலும் இக்கோயில் வடக்குப்புற குமுத பட்டையில் காணப்படும் கல்வெட்டு ஸ்வஸ்தஸ்ரீ சகல புவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குவதால் இக்கல்வெட்டு பிற்கால பல்லவ மன்னனான காடவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (கி.பி 1216-1242) கல்வெட்டு என்று அறியமுடிகிறது. இது அம்மன்னனின் மூன்றாம் ஆட்சியாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1219 ம் ஆண்டாகும்.

 ராஜராஜ அதியமானின் மகன்

ராஜராஜ அதியமானின் மகன்

அதாவது கி.பி 1219 ஆம் ஆண்டு சோழ பேரரசின் கீழ் இன்றைய தர்மபுரி பகுதியை ஆட்சிபுரிந்த வந்த சிற்றரசனான ராஜராஜ அதியமானின் மகனான விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் இக் கோயிலைக் கற்றளியாக (கருங்கற்களால் ஆன கோயில்) செய்து தந்துள்ள செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் சோழ பேரரசின் வலிமைமிக்க மன்னனான மூன்றாம் குலோத்துங்கன் கீழ் ஆட்சி செய்துவந்தான். அதியர் வம்சத்தினரான இவர்கள் சேரர்களின் கிளை மரபினர் என்பதை மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது.

 கல்வெட்டு குறிப்புகள்

கல்வெட்டு குறிப்புகள்

மூன்றாம் குலோத்துங்கன் மறைவுக்குப் பின்னர் போசாளர்களிடம் இவன் ஆண்ட பகுதி வீழ்ச்சி அடைந்து போனதால் , அதியர் மரபில் ஆண்ட கடைசி மன்னனும் இவனே ஆவான். அதே போல் இக்கோவிலின் மூலவராக உள்ள சிவபெருமானை "அம்பல கூத்த நாயனார்" என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதை நம்மால் அறியமுடிகிறது.

 விஷ்ணு துர்க்கை சிற்பம்

விஷ்ணு துர்க்கை சிற்பம்

இதைத் தவிர்த்து இவ்வூரில் உள்ள ஏரியில் மூன்றடி உயரப் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகக் கிராமிய கலை பாணியில் இரண்டு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி எருமை மீது நின்ற கோலத்தில் விஷ்ணு துர்க்கை சிற்பமும் , அதனருகே 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய கல்வெட்டு ஒன்றும் காணக்கிடைக்கிறது. இதனை ஊர்மக்கள் பாலாத்தம்மன் என்ற பெயரில் வணங்குகின்றனர்.

 வரலாற்றின் சாட்சியங்கள்

வரலாற்றின் சாட்சியங்கள்

ஏற்கனவே இவ்வூரில் ஆவணம் செய்யப்பட்ட மூன்றாம் நந்தி வர்மனின் பதினேழாவது ஆட்சி ஆண்டை சேர்ந்த நடுகல்லில் இவ்வூர் "சுறைகுளத்து" என்றும் , புதியதாக கண்டுபிக்கபட்ட 13ம் நூற்றாண்டு கல்வெட்டில் "சுறைகுளத்தூர்" என்றும் குறிப்பிடப்பட்டப் பெயரே இன்று மருவி சொரக்கொளத்தூர் என்று வழக்கில் உள்ளது.
பல்லவர் காலந்தொட்டே சிறப்புடன் இயங்கி வரும் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலின் தடைப்பட்ட திருப்பணிகளை முழுமை செய்து வரலாற்றின் சாட்சியாய் உள்ள இக்கோயிலையும் சிற்பங்களையும் ஊர்மக்களும் , சிவன் அடியார்களும், அரசும் இணைந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+