ஆரணியில் தொட்டு தொட்டுப் பேசி சில்மிஷம்.. தவெக அலுவலகத்துக்கே பூட்டு.. யார் இந்த திருவண்ணாமலை சத்யா?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தவெக பெண் நிர்வாகிகள் நடத்திய போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மாவட்ட செயலாளர் சத்யா மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்த பெண்கள், கட்சி அலுவலகத்தையே இழுத்துப் பூட்டிப் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். இந்த விவகாரம் இப்போது விஜய் தலைமையிலான தவெகவுக்கு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரணியில் என்ன நடந்தது?
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் சத்யா. இவரது கட்சி அலுவலகம் ஆரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண் நிர்வாகிகளிடம் சத்யா தவறாக நடந்து கொள்வதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன.

பெண் நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசுவது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது, சில்மிஷம் செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது பெண்கள் முன்வைத்துள்ளனர். மேலும், ஒரு பெண் நிர்வாகியிடம் பணம் மற்றும் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை என்றும் புகார் கூறியுள்ளனர்.
ஆரணி - தவெக நிர்வாகி
இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த தவெக மகளிர் அணி மற்றும் பெண் நிர்வாகிகள், ஆரணியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய அவர்கள், அங்கிருந்த பேனரில் இடம்பெற்றிருந்த மாவட்ட செயலாளர் சத்யாவின் படத்தில் கருப்பு மை பூசி அழித்தனர். சத்யாவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சத்யா மீது ஆரணி டவுன் போலீசிலும், டிஎஸ்பியிடமும் பெண் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் நிர்வாகி கண்ணீர்
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் நிர்வாகி ஒருவர், "அவர் எங்களிடம் பேசும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தொட்டுப்பேசி தொல்லை தந்தார்.. அவர் நடந்து கொண்ட முறையே தவறாக இருந்தது.. எம்எல்ஏ மூலம் பொதுச்செயலாளரிடம் புகார் தந்தேன். உடனே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மாவட்ட செயலாளர் மிரட்டினார்.. இதனால், மனஉளைச்சல் அடைந்ததால், நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.
இதற்கு பிறகு மாவட்ட செயலாளர் மீது கட்சி தலைமைக்கு மீண்டும் புகார் அளித்தோம். இதனால் ஆத்திரமடைந்த அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்" என்கிறார் கண்ணீருடன்,
மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யா பற்றி சொல்லும்போது, அவருக்கு ஆதரவாகவும், அனுசரித்தும் செல்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் மாவட்ட அளவில் பதவிகள் வழங்கப்படுகிறது. பெண் நிர்வாகிகளை இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு ஆபாசமாக வார்த்தைகளில், மெசேஜ் மூலம் பேசி தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருகிறார்" என குற்றம்சாட்டியுள்ளனர்.
காரமடையிலும் பெண் நிர்வாகி புகார்
இதனிடையே, கோவை மாவட்டம் காரமடையிலும் தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் மற்றும் ஜாதி ரீதியான துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கருப்பசாமி பெண் நிர்வாகியிடம், "மாத மாதம் பணம் தருகிறேன், என்னுடனே உன்னை வைத்து கொள்கிறேன்" என்று பேசியதாக கூறப்படும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்
ஏற்கெனவே கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். ஆனாலும், அதிமுக மற்றும் திமுக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விஜய்க்கு எழும் கேள்விகள்
இப்படி தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினந்தோறும் இந்த அரசை கண்டித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. தவெக நிர்வாகிகள் மீதான புகார்களை முன்வைத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் என்ன செய்யப் போகிறார்
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் கிடையாது என்று கூறிய விஜய், தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார்கள் வரும்போது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
குறிப்பாக, ஆரணியில் பெண் நிர்வாகிகள் சொல்லும் புகார்கள் ஏற்கெனவே கட்சித் தலைமை வரை சென்றதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, புகார் அளித்த பெண்களின் குறைகளை கட்சித் தலைமை எப்படி விசாரித்தது? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இனிமேல் இதுபோன்ற புகார்கள் வராமல் தடுக்க விஜய் என்ன செய்யப் போகிறார்?
இந்தக் கேள்விகளுக்கு தவெக தலைமை அளிக்கும் பதில் என்ன என்பதைதான் தமிழகம் இப்போது எதிர்நோக்கி காத்திருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
