மலேசியாவில் மர்மமான முறையில் இறந்த மன்னார்குடி பெண்.. ‘கொத்தடிமையாக’.. உறவினர்கள் பகீர் புகார்!
திருவாரூர் : மன்னார்குடி அருகே மலேசியாவுக்கு வீட்டு வேலைக்குச் சென்ற பெண் துன்புறுத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை, அங்கு ஒரு வீட்டில் கொத்தடிமை இருக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென அவர் இறந்துவிட்டதாக வீட்டுக்கு தகவல் சொல்லியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் முழக்கம்.. சசிகலாவின் முதல் உரை.. எடப்பாடியின் 'கோடு-ரோடு’.. மை தீட்டிய மருது அழகுராஜ்!

மன்னார்குடி பெண்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லதா என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடைசியாக கடந்த 19ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் லதா. அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மலேசியாவில் வீட்டு வேலை
இந்நிலையில் மலேசியாவிற்கு அனுப்பி வைத்த ஏஜென்ட் முனி என்பவர், லதா இறந்துவிட்டதாக நேற்று இரவு அவரது கணவருக்கு தெலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். லதா இறந்ததாக வந்த செய்தியைக் கேட்டு நாகராஜனும், அவரது மகனும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

கொத்தடிமையாக
லதாவை மலேசியாவுக்கு அனுப்பிய ஏஜென்ட் முனி, அங்கு சரியான வேலை இல்லாமல், கொத்தடிமையாக ஒரு வீட்டில் வேலைக்கு வைத்ததாக கூறப்படுகிறது. லதாவை அந்த வீட்டினர் லதாவை கொடுமைப் படுத்தியதாகவும், சரியாக உணவு கூட தராமல், வேலை மட்டும் வாங்கியதாகவும், லதா போனில் வீட்டில் இருப்பவர்களிடம் புலம்பியுள்ளார்.

ஏமாற்றிய ஏஜெண்ட்
லதா பலமுறை தன்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் எனக் கூறியும் ஏஜென்ட் அனுப்பாமல், வேறு ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டதாகவும், அங்கும் கொடுமை செய்ததாகவும், ஏஜென்டடிடம் ஊருக்கு அனுப்புமாறு கேட்டதற்கு இதோ அதோ என அவர் ஏமாற்றி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் நாகராஜன், லதா சொந்த ஊருக்குத் திரும்ப டிக்கெட் போட ஏஜென்டிடம் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பணத்தையும் வாங்கிக்கொண்டு அவர் டிக்கெட் போடாமல் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

மர்ம மரணம்
பின்னர் வேறொருவர் மூலமாக லதா இந்தியா வருவதற்கு டிக்கெட் போட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் அவர் தாய்நாட்டுக்கு வருவதாக இருந்த நிலையில், லதாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போன் வந்துள்ளது. பின்னர் அன்று மாலையே அவர் இறந்துவிட்டதாக தகவல் சொல்லியுள்ளனர். இதனால், அவரது மரணத்தில் மர்மம் ஒருப்பதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

தமிழக அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில், உயிரிழந்த லதாவின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருடைய மரணத்திற்கு காரணமான ஏஜென்ட் முனி மற்றும் அவரை கொத்தடிமையாக நடத்திய மலேசிய குடும்பத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வேதனையுடன் தமிழக அரசுக்கு லதாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.