நன்னிலம் கோவில் பூக்குழி திருவிழா... கரகத்தோடு தீயில் விழுந்த பக்தர் - 2 பேர் படுகாயம்
நன்னிலம் அருகே நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் தீயில் விழுந்து 2 பேர் காயமடைந்துள்ளனர். இருவரும் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர்: பூக்குழி திருவிழாவில் கரகம் எடுத்து வந்த பக்தர் ஒருவரும் மற்றொரு இளைஞரும் நிலைதடுமாறி தீயில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கோவில் திருவிழாக்களில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருகே களிமேடு அருகே சப்பரத்தேர் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடைபெற்றது. தேர் தெற்கு வீதி என்னும் இடத்தில் திரும்பும்பொழுது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டைபோடும் தொழிலாளியான தீபராஜன் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா இன்று நடைபெற்றது சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிக்க தயாராக இருந்தனர்.
காவல்துறையினர் பாதுகாப்புடன் திருவிழா நடைபெற்றது. முதலில் கரகம் ஏந்தி வந்த அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பூக்குழி திருவிழாவை தொடங்கி வைத்தார். கரகம் சுமந்து கொண்டு தீ மிதித்த நிலையில் பாதி வழியிலேயே அவர் கரகத்துடன் தடுமாறி தீயில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயங்களுடன் அவர் சிகிக்சை பெற்று வருகிறார்.
பலர் தொடர்ந்து தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். பத்து பேர் இறங்கிய பின்னர் சக்தி விநாயகம் வயது 22 என்ற இளைஞர் தீக்குண்டத்தில் இறங்கி ஓடினார். அப்போது நிலை தடுமாறி குண்டத்திற்குள் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் குண்டம் திருவிழாவில் இன்று கரகம் சுமந்தவரே கரகத்துடன் தீ குண்டத்தில் விழுந்தது அபசகுணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications