திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 ஆன்லைன் டிக்கெட் கிடைக்கலையா? லட்டு போல் 5 வழிகள் இருக்கே!
திருப்பதி:திருப்பதிக்குச் செல்ல திட்டமிட்டு ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நொடி பொழுதில் விற்றுத் தீர்ந்துவிட்டதா, கவலையை விடுங்கள், இருக்கவே இருக்கு 5 வழிகள், இதன் மூலம் ஏழுமலையானை தரிசித்துவிடலாமே! அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்றால் 7 கடல், 7 மலை தாண்டிச் சென்று தரிசிப்பதை காட்டிலும் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. மாதந்தோறும் 24 ஆம் தேதி சிறப்பு தரிசன டிக்கெட்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

இந்த புக்கிங்கில் காலை 10 மணிக்கு 4 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஆனாலும் எல்லாருக்கும் கிடைக்குமா என்ற அது சந்தேகமே! நம் குடும்ப உறுப்பினர்களின் டேட்டாக்கள் எல்லாவற்றையும் ரெடி செய்துவிட்டு உட்கார்ந்தாலும் நொடி பொழுதில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
இப்படியே சிலர் மாதந்தோறும் 24 ஆம் தேதி புக்கிங்கிற்கு முயற்சித்து ஏமாந்துவிடுகிறார்கள். இதில் சிலர் சென்டிமென்ட்டாக ஃபீல் செய்கிறார்கள், அதாவது என்னடா இது நம்மை ஏழுமலையான் அழைக்கவில்லையே என வருந்துகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி! இனி ஏழுமலையானை தரிசிக்க 5 வழிமுறைகள் இருக்கின்றன.
ரூ 300 தரிசன டிக்கெட் முறை கிடைக்காவிட்டால் இந்த முறைகளில் தரிசனம் செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்எஸ்டி டோக்கன்: அதாவது சர்வ தரிசன டோக்கன் என்பதுதான். தர்ம தரிசனத்திற்கு செல்ல கூண்டுக்குள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக ஒரு நேரம் ஒதுக்கி டோக்கன் தருகிறார்கள். அந்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னர் வரிசையில் போய் நின்றால் 6 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம். இந்த டோக்கன்களை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாச காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், அலிபிரி நடைபாதை அருகே இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் உள்ள கவுன்ட்டர்களில் எஸ்எஸ்டி டோக்கன்கள் தினசரி அதிகாலை 2 மணி முதல் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் மொத்தம் 20 ஆயிரம் வழங்கப்படுகின்றன.
திவ்ய தரிசனம்: அடுத்ததாக திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம். அதாவது ஸ்ரீவாரிமெட்டு வழியாக மட்டுமே நடைபாதை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் கீழே உள்ள கவுன்ட்டரில் தரிசன டிக்கெட் பெற்றுக் கொண்டு மலை ஏறத் தொடங்க வேண்டும். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு அப்படியே பஸ்ஸில் ஏறி வந்துவிடலாம் என நினைத்துவிடாதீர்கள். அங்கு 1200ஆவது படி அருகே ஸ்கேன் செய்வார்கள். அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
சர்வ தரிசன டோக்கன் இல்லாத தரிசனம்: தர்ம தரிசன வரிசைக்கான வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் நின்று கூட்டத்திற்கேற்ப அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்யலாம். அந்த வகையில் 24 மணி நேரம், 40 மணி நேரம் கூட சுவாமி தரிசனம் செய்த வரலாறு இருக்கிறது.
அனுகிரக ஹோமம்: ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக ஹோமம் என்பது அலிபிரி அருகே இருக்கும் கோயிலில் நடைபெறும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிக்கு பிறகு புக்கிங் செய்யப்படுகிறது. ரூ 1600 செலுத்தி ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். ரூ 1000 ஹோமத்திற்கு போக மீதமுள்ள ரூ 600 இல் இரு ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த ஹோமத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஹோமமானது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
சேவா டிக்கெட்டுகள்: மேற்கண்ட 4 வழிமுறைகளும் கைக் கொடுக்காவிட்டால் 5ஆவது வழி இருக்கிறது. அதாவது மாதந்தோறும் 21 அல்லது 22 தேதிகளில் சேவா டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்வார்கள். தோமலா சேவை, ஆர்ஜித சேவை, கல்யாண உற்சவம், சுப்ரபாத சேவை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை பெற்றாலும் ஏழுமலையானை தரிசிக்கலாம்.












Click it and Unblock the Notifications