திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்.. தேவஸ்தானம் குட்நியூஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெறும் வகையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறக்கப்பட்டுள்ளது.. புதிய மையத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார். ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் விவரம் பெற்றுக் கொண்டு டிக்கெட்டை அதிகாரிகள் வழங்குவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுள்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏழைகள் , பணக்காரர்கள் எல்லாருமே தவம் இருக்கிறார்கள். ஆந்திர மக்களால் பாலாஜி என்றும், தமிழக மக்களால் ஏழுமலையான் என்றும் வெங்கடேச பெருமாள் என்றும் போற்றப்படும் திருமலை கோயில் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற வைணவத் திருத்தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து வருகிறார்கள். தமிழக மக்கள் பலருக்கும் பிடித்த இந்த திருவேங்கடம் கோயில் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.

ஏழுமலையான் கோவில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும், திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலும் அமைந்திருக்கிறது. இந்த கோயில் சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைக் கொண்ட இந்த ஏழுமலையில் அமைந்துள்ளது. இந்த ஏழுமலைகளை கொண்டவர் என்பதால் தான் வெங்கடாசலபதியான பாலாஜி ஏழுமலையான் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். திருப்பதி திருமலைக்கு எப்போ தரிசனம் செய்ய சென்றாலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இங்கு ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தங்களால் முடிந்த பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
இந்த ஏழுமலையான் கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடங்களில் ஒன்று என்பதுடன், நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்கிறது. இந்து மத நம்பிக்கையின்படி, கலியுகத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற விஷ்ணுவின் அவதாரமாக வெங்கடேஸ்வரர் வந்துள்தாக மக்கள் நம்புக்கள். இந்த கோயிலுக்கு மிகப்பெரிய வரலாறு, அழகான கட்டிடக்கலை மற்றும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை மெய்சிலிர்க்க வைக்கும். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பக்தர்கள் பலர் பலமுறை தரிசனம் செய்ய சென்று வருகிறார்கள்.
இதனால் திருப்பதி ஏழுமலையானை எளிதாக தரிசிக்க டிக்கெட் பெறுவது என்பது எளிதானது அல்ல.. படி வழியாக நடைபயணம் செய்து வந்தாலும் சரி, பொதுதரிசன முறைப்படி தரிசிக்க வந்தாலும் சரி, நீண்ட நேரம் ஆகும். இதனால் பக்தர்கள் பலர் 300க்கு தரப்படும் விரைவு தரிசன டிக்கெட்டை விரும்புகிறார்கள். இந்த டிக்கெட்டை நேரடியாக பெற முடியாது. ஆன்லைனில் தான் பெற முடியும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஆன்லைன் டிக்கெட் முன்னதாக சில மாதங்கள் முன்பே வெளியிடப்படும். அதனை சரியாக கவனித்து புக்கிங் செய்தால் மட்டுமே விரைவு தரிசனம் கிடைக்கும்.. அதேநேரம் விஐபி தரிசன டிக்கெட்டும் திருப்பதியில் உண்டு. திருப்பதியில் விஐபி தரிசன டிக்கெட் பெற கோயிலுக்கு ரூபாய் 10000 நன்கொடை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் ஒரு நபருக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். இதுதான் திருமலையில் உள்ள நடைமுறையாகும்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெறும் வகையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. புதிய மையத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார். ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் விவரம் பெற்றுக் கொண்டு டிக்கெட்டை அதிகாரிகள் வழங்குவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications