திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க வைஜெயந்தி மாலை வழங்கிய விஐபி பெண்.. விலையை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க வைஜெயந்தி மாலையை காணிக்கையாக தந்துள்ளார் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டி.கே. ஆதிகேசவலு நாயுடுவின் பேத்தி தேஜஸ்வி. இந்த நகையின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள் தேவஸ்தான் அதிகாரிகள். பயப்பக்தியுடன் வழங்கிய அந்த தங்க வைஜெயந்தி மாலையை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு பெற்றுக் கொண்டார்.
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுள்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ் பெற்ற வைணவத் திருத்தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து வருகிறார்கள். சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளைக் கொண்ட இந்த ஏழுமலையான் மலையேறி தரிசிப்பது பலருக்கும் பிடிக்கும். இந்த ஏழுமலையான் கோயில் இந்துக்களின் நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாக விளங்குகிறது.

இந்த கோயில் எப்படி இருக்கிறது என்றால், திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும், திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலும் அமைந்திருக்கிறது. திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரை காதலித்த திருவேங்கமுடையான், தனது திருமண செலவுகளுக்காக செல்வத்துக்கு அதிபதியான குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்கவில்லை என்றும் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டு இருப்பதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.
அதாவது மகாலட்சுமியான பத்மாவதியை மணம் முடிப்பதற்காக, வேடன் ஸ்ரீநிவாசன், குபேரனிடம் இருந்து ஆயிரம் கோடி பொற்காசுகளை கடனாக பெற்றார் என்றும் இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது என்றும் கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே அந்த கடன் பத்திரத்தின் நிபந்தனையாக சொல்லப்படுகிறது. . அதனால் தான் பெருமாள் இதுவரை வட்டி மட்டும் கட்டி வருகிறார். அசல் கடனை அடைக்க முடியாமல் கடனாளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.அதனால் தான், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி வந்து தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்றும், செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் திருப்பதி வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என்றும், ஏழுமலையானை நம்பினார் கைவிடப்படார் என்ற நம்பிக்கையும் கோடிக்கணக்கான மக்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, கலியுகத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற விஷ்ணுவின் அவதாரமாக வெங்கடேஸ்வரர் வந்துள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். இதனால் எப்போதுமே ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது தரிசனம் என்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இங்கு ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தங்களால் முடிந்த பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். பல கோடீஸ்வரர்கள் கோடிகளை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொட்டி வருகிறார்கள். ஏழுமலையானுக்கு வழங்கப்பட்ட காணிக்கை மற்றும் தங்கம், நிலம் மற்றும் சொத்துக்கள் அளவிடவே முடியாதது. அந்த அளவிற்கு மக்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டி.கே. ஆதிகேசவலு நாயுடுவின் பேத்தி தேஜஸ்வி முத்துக்கள் பதிக்கப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைஜெயந்தி மாலையை ஏழுமலையானுக்கு காணிக்கையாக இன்று வழங்கினார். தேவஸ்தானம் சார்பில் அந்த மாலையை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு பெற்றுக் கொண்டார். காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க வைஜெயந்தி மாலை உற்சவமூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்பட இருக்கிறது. இதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் தங்க வைஜெயந்தி மாலை ஒன்றை காணிக்கையாக வழங்கவுள்ளதாக தேஜஸ்வி கூறினார்,












Click it and Unblock the Notifications