திருப்பதி ஏழுமலையான் தரிசனம்! டிசம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் இன்று தொடக்கம்
சென்னை: திருப்பதி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. எனவே ஒவ்வொரு நாளும் கூட்டநெரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஆன்லைன் புக்கிங் முறை அமலுக்கு வந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் இன்று தொடங்குகிறது. கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்சவத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டோக்கன் புக்கிங் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் செப்.24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
டிக்கெட் புக்கிங் எப்படி செய்வது?
திருமலை திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்வோர், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டியது அவசியம். சுலபமான தரிசனத்திற்கு, டிக்கெட்டுகளை முன்னரே பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
1. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://ttdsevaonline.com/) மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிகவும் எளிதான முறையாகும்.
வழிமுறைகள்:
பதிவு: அதிகாரப்பூர்வ TTD சேவா ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று, புதிய பயனர்கள் "Register Here" என்பதைக் கிளிக் செய்து, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் அதை வைத்து உள்ளே நுழையுவும்.
சேவை / தரிசனம் தேர்வு: "Seva / Darshan Booking" பகுதிக்குச் செல்லவும். இங்கு சுதர்சன டோக்கன் முறை (STS) தரிசனம், சிறப்பு நுழைவு தரிசனம் (₹300) மற்றும் பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். அங்கு நீங்கள் விரும்பும் தேதியை தேர்ந்தெடுக்கவும். இதல் சிவப்பு நிறத்தில் உள்ள தேதிகளில் டிக்கெட் முழுமையாக முடிவடைந்துவிட்டது என்றும், பச்சை நிறத்தில் உள்ள தேதிகளில் டிக்கெட் இருக்கிறது என்றும் அர்த்தம்.
பச்சை நிறத்தில் உள்ள தேதியையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு நபருக்கும் தேவையான விவரங்களை அதாவது பெயர், வயது, பாலினம், அடையாள அட்டை வகை மற்றும் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்யவும். தரிசனத்தின் போது நீங்கள் பதிவு செய்த அசல் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட்டுகளுக்கு கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும், இ-டிக்கெட் / உறுதிப்படுத்தல் சீட்டு திரையில் தோன்றும். இதை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம். முன்பதிவின் போது பயன்படுத்திய அசல் அடையாள அட்டையை தரிசனத்தின்போது கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பாக இலவச தரிசனத்திற்கான (STS) டிக்கெட்டுகள், குறிப்பிட்ட கால அட்டவணையில் வெளியிடப்படும். இவை மிக விரைவாகப் பதிவு செய்யப்படுவதால், புதிய தேதிகளுக்கான முன்பதிவு ஓபன் ஆனவுடன் லாகின் செய்ய தயாராக இருங்கள்.
2. சுதர்சன டோக்கன் முறை (STS) - இலவச தரிசனம்
இது பொதுவான, இலவச தரிசனத்திற்கான முறையாகும். ஆன்லைனில்: TTD இணையதளத்தில் இலவச STS டோக்கன்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்கான நடைமுறை மேலே குறிப்பிட்டது போலவே இருக்கும், ஆனால் கட்டணம் இல்லை.
இது தவிர நேரில் சென்று திருப்பதியில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பல இடங்களில் அமைந்துள்ள சுதர்சன டோக்கன் கவுண்டர்களில் அன்றைய அல்லது அடுத்த நாள் தரிசனத்திற்கான டோக்கன்களை நேரில் பெறலாம்.
ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டிலும் டிக்கெட்டுகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே முடிந்தவரை முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்யுங்கள். அதேபோல பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வரிசையில் நிற்க, நீங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்னதாகவே நுழைவு வாயிலுக்குச் செல்லவும்.












Click it and Unblock the Notifications