திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்கிறீர்களா? இனி அறை புக்கிங்கில் புதிய விதி அமல்
திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அறைகளை புக் செய்ய புதிய விதியை தேவஸ்தானம் விதித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முறைகேடுகளை தவிர்க்க விஐபிகளுக்கான தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை விஐபிகளுக்கான தங்குமிடங்களில் ஆதார் அட்டையை காட்டினாலே அறை வாடகைக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அறை வேண்டும் என்றால் ஆதார் அட்டையுடன் தரிசன டிக்கெட்டையும் சேர்த்து காட்ட வேண்டும். அப்போதுதான் அறை கிடைக்கும்.
பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 7500 அறைகள் உள்ளன. அவற்றில் 3500 அறைகள் பக்தர்களுக்காக வழங்கப்படும். 1580 அறைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வகையில் வழங்கப்படும்.
இது மட்டுமல்லாமல் கோயிலுக்கு நன்கொடை கொடுக்கும் பக்தர்களுக்கு 400 அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். 450 அறைகள் கவுன்ட்டர் மூலம் வந்து கேட்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமிருக்கும் அறைகள் விஐபிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
சில முக்கிய பிரமுகர்களின் ஆதார் அட்டைகளை வைத்துக் கொண்டு ஏஜெண்டுகள் அறைகளை புக் செய்து அதை அதிக விலைக்கு வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்டு முறைகேடு செய்கிறார்கள். இதை தடுக்கவே இந்த புதிய விதி அமலாகியுள்ளது.
எனவே விஐபிக்கள் ஆதார் அட்டையுடன் சுவாமி தரிசன டிக்கெட்டையும் காட்டினால்தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்படும் என்பதை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications