இன்னும் 5 மாசத்துல தேர்தல் வச்சுக்கிட்டு.. இப்படி ஒரு நெருக்கடியா? திருப்பூரால் டென்ஷனாகும் பாஜக!
திருப்பூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன. தேர்தலில் ஜெயித்து கொங்கு மண்டலத்தில் எப்படியாவது கோட்டை கட்டிவிட வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருக்கும் பாஜகவுக்கு, தலையில் இடியை இறக்கி இருக்கிறது திருப்பூர். எனவே இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் ஆடை ஏற்றுமதி தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போதைய பிரச்சனை. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரியை விதித்திருக்கிறது என்பது தெரிந்த கதைதான். விஷயம் என்னவெனில், இந்த வரிக்கு முன்னதாகவே, இந்திய பின்னலாடைகளுக்கு 16% வரை அமெரிக்க வரி போட்டிருந்தது என்பதுதான். எனவே திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அமெரிக்காவில் 65% வரை விலை அதிகமாக விற்பனையாகிறது.

திருப்பூர் ஆடைகள் காஸ்ட்லி
இதனால் இங்கிருந்து ஆடைகளை வாங்கி அங்கு விற்பதால் லாபம் கிடைக்காததால், ஒப்பந்ததாரர்கள் ஆர்டர் கொடுக்காமல் இருக்கின்றனர். எனவே, திருப்பூர் ஜவுளித் தொழில் சுமார் ரூ.12,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி ஆர்டர்களை இழந்துள்ளது. வரிவிதிப்பால், உற்பத்தி திறன் சுமார் 30% குறைந்துள்ளது. உற்பத்தி யூனிட்கள் மூடப்படும் அல்லது வேலை இழப்புகள் ஏற்படும் என பயந்துக்கொண்டிருந்த நிலையில் நல்வாய்ப்பாக அப்படி ஏதும் ஆகவில்லை. ஆனால், எவ்வளவு நாட்களுக்கு இப்படி இழுத்து பிடித்துக்கொண்டிருக்க முடியும் என்பதே இப்போதைய கேள்வி.
ஆர்டர்கள் ரத்து
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதை போல, இப்போதைக்கு திருப்பூரில் நிலைமை பரவாயில்லை என்று இருக்கலாம். அடுத்த மாதம் திருப்பூரே ஸ்தம்பிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆக.27ம் தேதி அமெரிக்காவின் வரி அமலுக்கு வந்தது. 3 மாதங்கள் கடந்துவிட்டன. அவ்வளவுதான் உற்பத்தி நிறுவனங்களால் தாக்குபிடிக்க முடியும். ஆக.27ம் தேதிக்கு முன்னர் பெறப்பட்ட ஆர்டர்களை சப்ளை செய்து வருவதால் இப்போது வரை யூனிட்கள் இயங்கி வருகின்றன.
எப்படி இருந்தாலும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் பழைய ஆர்டர்கள் எல்லாம் முடிந்தவிடும். புதிய ஆர்டர்களை எடுக்க முடியாமல் நிறுவனம் திணறும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலை வாய்ப்புகள் பாதிப்பு
திருப்பூரை பொறுத்தவரை, 2,000 ஏற்றுமதியாளர்களும், 20,000 தனிப்பட்ட யூனிட்களும் உள்ளன. இவை சுமார் ரூ.45,000 கோடி அளவுக்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அதேபோல ரூ.30,000 கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் செய்கின்றன. இக்குழுமம் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு வேலையை வழங்குகிறது, அவர்களில் 65% பெண்கள். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 68% அளவுக்கு பங்களித்து வருகிறது.
மாற்று வழி இல்லை
சரி அமெரிக்கா போனா என்ன? ஐரோப்பாவுக்கும், ரஷ்யா, ஜப்பானுக்கும் துணியை ஏற்றுமதி செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பலரும் யோசனை தெரிவித்து வருகின்றனர். யோசனை நல்லாதான் இருக்கு, ஆனா.. இது யதார்த்தத்தில் கதைக்கு ஆகாது என்று உற்பத்தியாளர்கள் புலம்புகிறார்கள். அமெரிக்காகாரன் கொடுக்கும் விலையை மற்ற நாடுகள் கொடுப்பதில்லை. நூல் விக்கிற விலைக்கு, மற்ற நாடுகள் கொடுக்கும் தொகை கட்டுபடியாகாது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
நெருக்கடியில் பாஜக
நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எங்க நாட்டு வேளாண் பொருட்களை இந்தியாவில் அனுமதித்தால்தான் வரி பிரச்சனை சரியாகும் என, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிற கணக்காக டிரம்ப் இருக்கிறார். அமெரிக்கா சொன்னதை கேட்டால், இந்திய விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவார்கள், கேட்காமல் போனால் திருப்பூரில் பாதிப்பு ஏற்படும். எதை செய்தாலும், தமிழ்நாட்டு தேர்தலில் அது எதிரொலிக்கும். எனவே இந்த விஷயத்தை கையாள்வது குறித்து பாஜக திணறி வருகிறது என அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications