ரூ.48.42 லட்சம் + ரூ.7.73 லட்சம்.. தாராபுரம் இடைத்தேர்தலால் கட்டுக்கட்டாக சிக்கும் ரொக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று நடத்திய சோதனையில் ஆவணங்கள் இன்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.48.42 லட்சம் ஒரு இடத்திலும், இன்னொரு இடத்தில் ரூ.7.63 லட்சமும் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பதுக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி ஆவணங்களின்றி அதிகளவில் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று தாராபுரத்தை அடுத்த மூலனூரில் விஸ்வநாதன என்பவரின் வீட்டில் ஆவணங்கள் இன்றி பணம் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கூடுதல் நிலைய கண்காணிப்பு குழுவினர் விஸ்வநாதன் வீட்டில் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உள்ள பேக்கில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவரது வீட்டில் இருந்த ரூ.48.42 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் மூலனூரில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் ஆவணங்கள் இன்றி ரூ.7.63 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் மூலனூரில் 56.05 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
