லாட்டரி அமைச்சர், உருட்டு கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர்.. தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
திருப்பூர்: லாட்டரி அமைச்சர், உருட்டுக் கட்டை அமைச்சர், பிளாக் டிக்கெட் அமைச்சர், சங்கி அமைச்சர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்ட பட்டியல் திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அமைச்சர்களின் பெயர் எங்களுக்கு மட்டுமல்ல, முதல்வர் விஜய்க்கும் கூட தெரியாது என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சட்டசபைத் தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக இடையில் மட்டும்தான் ஆவேசமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. விஜய் எவ்வளவு தான் கடுமையாக திட்டிய போதும், கிண்டல் செய்த போதும், திமுக தரப்பில் கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது தவெக ஆட்சி அமைத்து 5 மாதம் நிறைவடைய உள்ளது.

இப்படியான சூழலில் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கே தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவின் ஒரே இலக்காக தவெக மாறியுள்ளது.
ஏற்கனவே மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் மத்தியிலும், அதிமுகவினர் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் திமுக தரப்பில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர்களின் பெயரை கூறாமல், அவர்களுக்கு மக்கள் ஒரு பட்டப்பெயர் வைத்திருப்பதாக பட்டியலை வெளியிட்டார். அதன்படி உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் அமைச்சர்களின் பெயர் சொல்லி அழைத்தால் யாருக்கும் அவர்களை தெரியாது. பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். அரை டவுசர் அமைச்சர், சங்கி அமைச்சர், உருட்டுக்கட்டை அமைச்சர், பிளாக் டிக்கெட் அமைச்சர், பவுடர் அமைச்சர், திருட்டு விசிடி அமைச்சர், லாட்டரி அமைச்சர்.
ஒரு அமைச்சர் பெயர் கூட முதல்வர் விஜய் உட்பட யாருக்கும் தெரியாது. அவர் வென்றது எப்படி என்று அவருக்கும் தெரியவில்லை.. நமக்கும் தெரியவில்லை. அதனால் போன முறை செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். இந்த பெட்டி பாமா (சத்தியபாமா) மே 11ஆம் தேதி எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின், மே 22ஆம் தேதி பெட்டி வாங்கி கொண்டு தவெகவில் இணைந்து கொண்டார் என்று விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
