திருச்சியை அலறவிட்ட முறைகேடு.. கல்வி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிதியின் முறைகேடு செய்ததாக கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் வாங்குவது உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிதி செலவிடப்பட வேண்டும்.

இந்த நிதி மூலம் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியுடன் பள்ளிகளுக்கு பொருட்களை வாங்குவார்கள். இந்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அதாவது முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் என்பவர் இருந்தார். இவரும் சில தலைமயைாசிரியர்களுக்கும் சேர்ந்து இந்த நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதோடு, பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்த திருச்சியில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சாந்தி, ராஜேந்திரன் ஆகியோர் தற்போது கல்வி துறையின் இணை இயக்குனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications