மகன் ஒரு மாதிரி பேச.. அப்பா வேற மாதிரி சீண்ட.. திருச்சியில் அடங்கா கோபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பல இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரத்துக்கு செல்லாமல் கனத்த மவுனம் காத்து வருவது அதிமுகவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
திருச்சி லோக்சபா தொகுதியில் 2019-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் வென்றார். ஆனால் இந்த முறை திருநாவுக்கரசருக்கு மீண்டும் திமுக, காங்கிரஸ் என அத்தனை கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் திருச்சி தொகுதி இந்த முறை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டார். திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது முதலே ஏகப்பட்ட சர்ச்சைகளின் மையமாகவே அத்தொகுதி இருந்து வருகிறது.
திருச்சி தொகுதியை தமக்கு ஒதுக்காததால் கடும் கோபத்தில் இருந்து வருகிறாராம் திருநாவுக்கரசர். இதனை பகிரங்கமாக சமூக வலைதளத்திலேயே தமக்கு சீட் கிடைக்க கூடாது என விரும்பியவர்கள் எனக் குறிப்பிட்டு போட்டுடைத்தார் திருநாவுக்கரசர்.
திருச்சியில் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகத்தான் மதிமுக மூத்த தலைவரும் ஈரோடு சிட்டிங் எம்பியுமான கணேசமூர்த்தி தற்கொலையே செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதனை வைகோ திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
மேலும், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடவே மாட்டேன் என துரை வைகோ, அமைச்சர் நேரு உள்ளிட்ட திமுகவினர் முன்னிலையே ஆவேசமாகவும் பேசினார். இந்தப் பேச்சால் திமுகவினர் கொந்தளித்து போயிருக்கின்றனர். என்னதான் திமுக தலைமை சமாதானப்படுத்தி இருந்தாலும் துரை வைகோவின் இந்த போக்கை திமுக தொண்டர்கள் துளியும் சகிக்காதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநாவுக்கரசரின் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் ஒதுங்கிவிட்டனராம்; துரை வைகோவாச்சு.. திமுகவாச்சு.. நமக்கு எதுக்கு வேலை என இதர காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணிகளில் இறங்கவில்லை. இன்னொரு பக்கம் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கச்சத்தீவு விவகாரத்தில் பேட்டியளித்த வைகோ, தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதே காங்கிரஸின் வாடிக்கை என பேசிவிட்டார். அவ்வளவுதான் துரை வைகோவுடன் ஊர் ஊராக போன கதர் சட்டையினரும் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டனராம். திரும்புகிற பக்கம் எல்லாம் தமக்கு தாமே கண்ணி வெடி வைத்துக் கொண்டால் என்னதான் செய்வது என்பதுதான் திருச்சி திமுக, காங்கிரஸ் தொண்டர்களின் இயல்பான கேள்வியாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications