தமிழகம் சங்கிகளின் பூமி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நிச்சயம் நடத்தப்படும்.. அர்ஜூன் சம்பத் ஆவேசம்!
திருச்சி: தமிழ்நாடு சங்கிகளின் பூமி என்றும், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நிச்சயம் நடத்தப்படும் என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அர்ஜூன் சம்பத் கூறுகையில், புலால் மறுத்தல், ஜீவகாருண்யம் உள்ளிட்டவை வள்ளலாரின் கொள்கைகள். இந்த கொள்கைகளை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நாடாளுமன்ற பஞ்சாயத்து ராஜ் நிலை குழு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளனர். மாநிலத்திற்கு சுயாட்சி கேட்கும் திமுக, கிராமத்திற்கு சுயாட்சி கொடுப்பதில்லை. அத்தகைய கட்சியை சேர்ந்த கனிமொழிக்கு இந்த பதவி கொடுத்ததை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்தார்.

திருமாவளவன் மீது விமர்சனம்
பின்னர், திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது. அதனால்தான் இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார். வாதத்திற்காக இதை எடுத்துக் கொண்டாலும் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்த சான்றிதழில் இந்து என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து என்கின்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்று கூடுவதும், ஒற்றுமையோடு இருப்பதையும் இவர்கள் எதிர்ப்பதன் காரணமாகவே இது போன்ற கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

யார் இந்து?
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ராஜராஜ சோழன் இந்து அல்ல வள்ளலார் இந்து அல்ல என்று தெரிவித்து வருகின்றனர்அப்படியானால் யார் தான் இந்து?. திட்டமிட்டு கிறிஸ்தவ இஸ்லாமியர்களும் திராவிட இயக்கங்களும் இந்துக்களை இந்துக்கள் அல்லாதோர் என்ற பட்டியலில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள் அந்த முயற்சியை முறியடிப்போம் சனாதனம் காப்போம் என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. திருமாவளவனை தூண்டிவிட்டு, மத நல்லிணக்க பேரணிக்கு அனுமதி கேட்டு, இரண்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழகம் சங்கிகளின் பூமி
ஆனால் நீதிமன்றம் நவ.6ம் தேதி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. ஆர்எஸ்எஸ் ஒரு சட்டபூர்வமான அமைப்பு. நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்ட அமைப்பு. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தடுப்பதனால், ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை எவ்விதத்திலும் தடுக்க முடியாது. தமிழகம் சங்கிகளின் பூமி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமி. நிச்சயம் ஊர்வலம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications