ரூ.1023 கோடி சொத்தாம்.. விற்று தாங்க! அரசு பள்ளிகளுக்கு உதவுவேன்.. அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதிலடி
திருச்சி: அண்ணாமலை சமீபத்தில் திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து, திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார்.
திமுகவினர் டாப் தலைவர்கள் பெயர்கள் அதில் இருந்தது. இது திமுகவினர் ஊழல் பட்டியல் இல்லை என்றும் அவர்களிடம் இருக்கும் சொத்து பட்டியல் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை: மேலும், மிக விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது என்று வந்துவிட்டால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது என்றும் கூறியிருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணிக்கு உள்ளேயே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதேபோல திமுக தரப்பும் அண்ணாமலையின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இது தொடர்பாக திமுக தரப்பு அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அன்பில் மகேஷ்: இந்த விவகாரத்தில் திமுக தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து கூறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்துப் பேசியுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போது தான், அன்பில் மகேஷ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் "அண்ணாமலை சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அவர் உண்மை என்று நிரூபிக்கவில்லை என்றால் ரூ.500 கோடி கட்ட வேண்டும். இது குறித்து நாங்கள் ஏற்கனவே நோட்டீஸும் அனுப்பியுள்ளோம். அண்ணாமலை எனக்கு ரூ.1,023 கோடி சொத்துகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த சொத்தை அவரே விற்றுத் தந்தால் மிக்க மகிழ்ச்சி.
பள்ளிகளுக்கு உதவுவேன்: அந்த பணத்தை வைத்து 38,000 அரசுப் பள்ளிகளுக்கும் நானே புத்தகம் வங்கி தருவேன். அண்ணாமலை அதைச் செய்கிறாரா என்பதைப் பார்க்கலாம். நாம் ஆட்சிக்கு வருவதற்குள் இங்கே ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ்நாட்டைப் பாலைவனமாக மாற்றிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், திமுக அரசு அந்த பாலைவனத்தைச் செம்மைப்படுத்தி, நாட்டிலேயே நம்பர் ஒன்று மாநிலமாக மாற்றி வருகிறது.
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களைத் திசைதிருப்ப வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. திராவிட மாடல் ஆட்சியை முடித்துக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் நடக்காது. இந்த காமெடியை எல்லாம் நாங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறோம். அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மக்கள் பணியை மட்டும் பாருங்கள் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எங்களைத் தூக்கி வீசும் அதிகாரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications