தனிக்குடித்தனம் வராததால் ஆத்திரம்.. மனைவியை வெட்டி கொன்ற கணவன்.. திருச்சி அருகே பயங்கரம்
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனிக்குடித்தனம் வர மறுத்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் புது காலனியை சேர்ந்த தம்பதி ரமேஷ் (வயது 42) கோமதி (வயது 34).
ரமேஷின் முதல் மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதால், கோமதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடு
இந்த தம்பதிக்கு ஜனனி (5) என்ற மகளும், ரதீஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர். ரமேஷ் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். ஆழ்துளை கிணறு அமைக்கும் ஆபரேட்டராக பணியாற்றி வரும் ரமேஷ் 6 மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாராம். ரமேஷின் மனைவியான கோமதிக்கு சரியாக காது கேட்காது என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறு சிறு சண்டைகளும் நடக்கும் என்று அக்கம் பக்கத்தினர் சொல்கின்றனர்.

பேசாமல் இருந்து வந்தார்
இந்த நிலையில், ரமேஷ் தனது மனைவியிடம் தனிக்குடித்தனம் சென்று விடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், கோமதி அதற்கு மறுப்பு தெரிவித்தது இருக்கிறார். இதனால், இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த கோமதி தனது கணவரிடம் பேசாமல் இருந்து வந்தார் என்று அக்கம் பக்கத்தில் கூறப்படுகிறது.

மீண்டும் வாக்குவாதம்
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல தனது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு கோமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த கணவர் ரமேஷ் மனைவியிடம் மீண்டும் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பேச தொடங்கியுள்ளார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சரமாரியாக வெட்டினார்
இதில், ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மனைவியை அடித்துள்ளார். இதனால் கோமதி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் அரிவாளை எடுத்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மேலும் அச்சம் அடைந்த கோமதி வீட்டை வீட்டு வெளியே ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திய ரமேஷ், தாலிகட்டிய மனைவி என்று கூட பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

போலீசில் சரண்
இதில் படுகாயம் அடைந்த கோமதி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மனைவியை அரிவாளால் வெட்டிய கையோடு நேராக ஜெம்புநாதரம் காவல் நிலையம் சென்ற ரமேஷ் விவரத்தை சொல்லி சரண் அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். தனிக்குடித்தனம் வராத ஆத்திரத்தால் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications