தூத்துக்குடி மாவட்டத்திற்கே பெருமை.. சாலையோரத்தில் கிடந்த ரூ 47 ஆயிரத்தை போலீசிடம் கொடுத்த இளைஞர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கிடந்த ரூ.47 ஆயிரம் பணத்தை நேர்மையான முறையில், காவல் நிலையத்தில் ஒப்படைத்த 18 வயது இளைஞரை காவல்துறையினர் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம், சொக்கனூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துராஜா என்ற மதன் (18). இவர் ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் ரூ.47 ஆயிரம் பணம் கிடப்பதைக் கண்டார்.

உடனடியாக அந்தப் பணத்தை எடுத்த முத்துராஜா, அதனைத் தன்வசம் வைத்துக் கொள்ளாமல் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, பணத்தைத் தவறவிட்டவர் யார் என்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பணத்தைத் தவறவிட்ட நபரைக் கண்டறிந்து காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்.
பின்னர், இளைஞர் நேர்மையாக ஒப்படைக்கப்பட்ட ரூ.47 ஆயிரம் பணத்தை உரியவரிடம் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் ஒப்படைத்தார். சாலையில் கிடைத்த பணத்திற்கு ஆசைப்படாமல், நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மதனின் செயலை காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டினர்.
இளைஞரின் நேர்மையான செயலுக்கு பொதுமக்களிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது போல் தற்போது பலர் நகையை தவற விட்டுவிடுகிறார்கள். வீட்டில் பழைய பொருட்களை சீரமைக்கும் போது நகைகளுடன் குப்பையில் போட்டுவிடுகிறார்கள். தூய்மை பணியாளர்கள் அது எத்தனை சவரனாக இருந்தாலும் சரி உடனே எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.
பெரும்பாலானோர் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் நேர்மையுடன் இது போன்ற தருணங்களில் நகைகளையும், பணத்தையும் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஆட்டோக்களில் கூட சிலர் பணப்பையும் நகைகளையும் வைத்துவிட்டு இறங்கிவிடுவார்கள். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் அதை கொண்டு போய் உரியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.
ஒருவரது பொருளாதார நிலைமை மோசமாக இருந்தாலும் இது போன்ற சூழல்களில் நேர்மையுடன் இருப்பதுதால் அவர்கள் கோடீஸ்வரர்களாக மக்கள் மனங்களில் உயர்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
