சீர் செய்யப்பட்ட தண்டவாளங்கள்! தூத்துக்குடி டூ சென்னை ரயில் சேவை இன்று தொடங்கியது! பயணிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்கு புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
ரயில் போக்குவரத்தை பொறுத்த அளவில் டிச.17ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் முழுவதும் மழை தேங்கியது. குறிப்பாக தாதன்குளத்தில் ரயில் தண்டவாளத்தின் கீழே இருந்த ஜல்லி கற்கள், மண் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
இந்த ரயிலில் சிக்கியிருந்த 500க்கும் அதிகமானோர் 2 நாட்களுக்கு பின்னர்தான் மீட்கப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள், அங்கிருந்து தூத்துக்குடி வரும் ரயில்கள் அனைத்தும் கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று முதல் மீண்டும் ரயில் சேவைகள் வழக்கம் போல இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து மதுரை வரையிலான ரயில் பாதையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டுவிட்டன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் திருச்செந்தூர் டூ தூத்துக்குடி ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications