''அண்ணன் துரைமுருகன் படித்த அரசுப் பள்ளி இது''! எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு! ஸ்டாலின் பூரிப்பு!
தாம் படித்த பள்ளிக்கு முதல்வரை அழைத்துச் சென்ற அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: அமைச்சர் துரைமுருகன் படித்த அரசுப் பள்ளியில் நடைபெறும் விழாவில் தாம் பங்கேற்பதில் பெருமை கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 5,351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும் அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

துரைமுருகன் படித்த பள்ளி
இந்தப் பள்ளி வளாகத்திற்குள் நுழைகிறபோது, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார்கள், அதைப் பெருமையோடு சொன்னார்கள், நான் படித்த பள்ளி இந்தப் பள்ளி. அந்தப் பள்ளிக்குள்ளே நுழைகிறோம் என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். எனவே, அவரை ஆளாக்கியிருக்கக்கூடிய, அவரைப் போன்ற பல்வேறு மாணவச் செல்வங்களை எல்லாம் உருவாக்கி இருக்கக்கூடிய, இன்னும் உருவாக்க இருக்கக்கூடிய இந்தப் பள்ளியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மீண்டும் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2400 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாழடைந்து இருக்கக்கூடிய பள்ளிக் கட்டடங்களை பழுதாகிப் போயிருக்கக்கூடிய வகுப்பறைகளை சீர்செய்திட வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இன்றைக்கு மட்டும் இந்தத் திட்டத்தின் மூலமாக, நீங்கள் காணொலிக் காட்சியில் பார்த்திருப்பீர்கள், பல்வேறு மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

5351 புதிய பள்ளி வகுப்பறைகள்
அந்த நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆட்சித்தலைவர்கள் எல்லாம் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இன்றைக்கு மட்டும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டக்கூடிய அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை இங்கு உங்கள் முன்னாலே நாம் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

கல்வி -மருத்துவம்
நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்ற நேரத்தில் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கல்வியை, மருத்துவத்தை இரண்டு கண்களாக நாங்கள் பாவித்து அதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை நான் எடுத்துச் சொன்னதுண்டு. அந்த வகையில் தான், இன்றைக்கு இந்தத் திட்டம் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

மரத்தடி நிழல்களில்
பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்த நிலையில், வகுப்பறைகள் இல்லாத வகையில் மரத்தடி நிழல்களில் உட்கார வைத்து அதில் வகுப்புகள் நடத்தக்கூடிய அந்த காட்சிகளையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும், அந்த மாணவர்கள் வசதியாக நல்லவித அடிப்படை வசதிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய சிந்தனைகள் அந்தக் கல்வியை போய் சேர முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து, அதற்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் பெயரிலே இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்திருக்கிறோம்.

பயன்படுத்திக் கொள்க
எனவே இதன் மூலமாக பல பள்ளிகள் பாழடைந்திருக்கக்கூடிய, சீரழிந்து இருக்கக்கூடிய அந்த பள்ளிகளெல்லாம் இன்றைக்கு மேம்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதை நல்ல வகையில், அந்தந்த பகுதியிலே இருக்கக்கூடிய அந்தந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.












Click it and Unblock the Notifications