யார் அந்த மாஸ்க் முகம் - ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையனை பிடிக்க 8 தனிப்படை அமைப்பு
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பிரபலமான தனியார் நகை கடை. தரைதளம் உட்பட 5 அடுக்குகள் கொண்ட நகை கடையில் தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் வெள்ளி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாடிகளில் தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆய்வகமும், 5 வது மாடியில் நகை கடையில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கியுள்ளனர்.

லாக்கர்கள் உடைப்பு
புதன்கிழமையன்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள் இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கொள்ளையர் வந்தது எப்படி
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் நகைக்கடை முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. கடையின் பின்பக்கம் உள்ள காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

மாஸ்க் அணிந்த கொள்ளையன்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒல்லியான முகமூடி அணிந்த உருவம் ஒன்று கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடிப்பது பதிவாகியுள்ளது. கொள்ளை போன நகை கடைக்கு அருகில் தடையங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டன. கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரிகள் நேரில் ஆய்வு
வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்

யார் அந்த மாஸ்க்
விசாரணைக்குப் செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் குமார், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

கொள்ளையன் புகைப்படம்
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவனின் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications