சுதீஷ் சொன்ன சில நிமிடங்களிலேயே அதிரடி உத்தரவு.. 6 மாதத்தில் வேலூர் ஏர்போர்ட் ஓபன்.. செம சர்ப்ரைஸ்
வேலூர்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி என 6 முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் பிஸியாக இயங்கி வரும் நிலையில், அடுத்ததாக லிஸ்ட்டில் இணையப்போகும் அந்த முக்கிய நகரம் எது தெரியுமா? அதுதான் வேலூர்! 98 ஏக்கர் பரப்பளவில் உருமாறிக் கொண்டிருக்கும் ஏர்போர்ட் விமானத்தில், "எப்போதுதான் விமானம் பறக்கும்?" என்ற கேள்வி வேலூர் மக்களிடையே நீண்ட நாளாகவே ஒரு எதிர்பார்ப்பாக நீடித்து வருகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சூப்பர் பதிலை தந்துள்ளார்.
எப்போதுமே, ஒரு பிராந்தியத்தில் அமையும் ஏர்போர்ட் என்பது வெறும் போக்குவரத்து சாதனமாக மட்டும் முடிந்துவிடுவதில்லை, மாறாக, அது அந்த பகுதியின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையே மாற்றியமைக்கும் திறன் கொண்டது.

வேலூர் ஏர்போர்ட்
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப விமான நிலையங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாகவே நீடித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என ஒருசில குறிப்பிட்ட நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு விமானப் போக்குவரத்து இயங்கி வரும் சூழலில், மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்த வசதி பரவலாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது... அந்தவகையில்தான் வேலூர விமான நிலையம் பணிகள் ஆரம்பமாகின..
மத்திய அரசின் உடான் திட்டம்
கடந்த 2017ம் ஆண்டிலிருந்து இந்த பணிகள் மீண்டும் உயிர்பெற்றன. மத்திய அரசின் "உடான்" திட்டத்தின் கீழ் சுமார் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டன. இப்போது ஓடுபாதை மற்றும் முனைய கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.. அதனால் இந்த ஏர்போர்ட் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதில் ஆர்வம் எழுந்தபடியே உள்ளது.
சமீபத்தில்கூட வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.
வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது
அப்போது, விமான நிலையத்திற்கான சீரமைப்புப் பணிகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது, இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள சிறு சிறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வேலூர் விமான நிலையம் மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்" என்று உறுதி தந்திருந்தார். இப்போது எல்கே சுதீஷூம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தேமுதிக எல்.கே. சுதீஷ்
தேமுதிக எல்.கே.சுதீஷ் டெல்லியிலுள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, வேலூர் விமான நிலையத்தை உடனடியாக இயக்கக் கோரி மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர், உடனடியாக வேலூர் விமான நிலையத்தின் தற்போதைய கள நிலவரம் குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
பிறகு, நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்தார். அதுமட்டுமல்ல, "இன்னும் அடுத்த 6 மாதங்களுக்குள் வேலூர் விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்" என்ற உறுதிமொழியையும் வழங்கினார். மத்திய அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு, எல்.கே.சுதீஷ் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வேலூருக்கு மெகா சர்ப்ரைஸ்
இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகை தரும் நிலையில், இந்த ஏர்போர்ட் வசதி அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் சிரமமில்லாத விரைவுவான பயணத்தை சாத்தியமாக்கும்.
மத்திய அரசு அதிரடி
அதேபோல, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உலகப் புகழ்பெற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதித் தொழில் இந்த விமானப் போக்குவரத்து மூலம் புதிய வேகத்தை பெறுவதோடு, சர்வதேச வர்த்தகர்களின் நேரடி வருகை அதிகரித்து, அந்தப்பகுதியில் புதிய தொழில் முதலீடுகளும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாகும்.
வி.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் சர்வதேச மாணவர்கள், வேலூர் பொற்கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்லும் ஆன்மீக பயணிகள் என அனைவருக்கும் இந்த வேலூர் விமான நிலையம் ஒரு மிகச் சிறந்த போக்குவரத்து இணைப்பாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது...!!


Click it and Unblock the Notifications
