'அந்த' திறமையும், தகுதியும் அவர்களுக்கு மட்டுமே உண்டு.. முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்த ஓபிஎஸ்
ராணிப்பேட்டை: திமுக பொய் சொல்லி ஆட்சியை பிடித்துள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் இன்று காலை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உடனான ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி நடைெபற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அதில் உரை நிகழ்த்தினார்.
ஓபிஎஸ் பேசியதாவது: உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது உங்கள் முகங்களில் ஒரு வெற்றிப் புன்னகை இருப்பதை நான் கண்கூடாக பார்க்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நடைபெற இருக்கின்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு இடங்களை அதிமுக வெற்றி பெறப் போகிறது என்பதை உறுதியாக கருதுகிறேன்.

வேலுமணி ராசி
தேர்தல் முடிந்து அதற்குப் பிறகு இதே மன்றத்தில் தேர்தல் நடைபெற்ற பிறகு வெற்றி விழாக் கூட்டம் நடைபெறும் என்பது உறுதி ஏனென்றால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருப்பவர் அருமை சகோதரர் எஸ்.பி.வேலுமணி (கடும் கரகோசம்). சட்டசபை தேர்தலின்போது கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் முழுக்கமுழுக்க அதிமுக கூட்டணி வென்றது . அப்படியான ஒரு தேர்தல் ராசிக்காரர் வேலுமணி.

அதிமுகவினர் உத்வேகம்
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மிக குறுகிய வாக்கு விகிதத்தில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம். வெற்றி வாய்ப்பை இழந்த அந்த ஆதங்கம் அதிமுகவினரிடம் ஆதங்கமாக மாறி நமது கட்சிக்காரர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும் தமிழகத்தில் இருக்கும் மக்கள் நம்ம பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி.

அண்ட புளுகு ஆகாச புளுகு
சட்டசபை தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டுக் கொண்டு பொய்யாக பேசினார்கள். அண்ட புளுகு, ஆகாச புளுகு அவிழ்த்து விட்டனர். இப்படி பொய் சொல்லும் திறமையும், தகுதியும் திமுகக்காரர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். முடிந்ததா, முடியல. தெரிந்திருந்தும், பொய்யை திரும்ப திரும்ப சொல்லி நம்ப வைப்பதில் கில்லாடிகள். சொன்னீர்களே, செய்தீர்களா என்று நீங்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது கேட்கனும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.

சட்டம் ஒழுங்கு மோசம்
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேறு பகுதிகளில் இருந்த ரவுடிகள் கூட தமிழகத்துக்கு வந்து தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் செல்லும் பெண்களிடம் செயின் வழிப்பறி செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது. அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் ரவுடிகளை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறது தமிழக அரசு. இப்படி சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தால் புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு எப்படி வரும்? இதை நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

உதயநிதிக்கு தோப்புகரணம்
இதனிடையே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கழுத்தை வெட்டி எடுப்பது நடக்கிறது. இது திமுக அரசின் சாதனை. உதயநிதி ஸ்டாலினுக்கு தோப்புக்கரணம் போடுவதற்கு அமைச்சர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது . நிதி நெருக்கடி என்று கூறி அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிபந்தனைகள் என்ற பெயரில் திமுக அரசு நிறுத்திவிட்டது. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய ஸ்டாலின் அதில் 10 வாக்குறுதிகளையாவது கூறமுடியுமா. கருணாநிதிக்கு சிலை அமைக்க 32 கோடி ரூபாய், நூலகம் கட்ட 100 கோடி ரூபாய் உள்ளது என்றால் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் பணம் இல்லையா? இவ்வாறு சிவி சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications