கர்ப்பிணியை தள்ளிவிட்ட அதே காட்பாடி.. ரயிலில் அதிர்ச்சி சம்பவம்.. பெங்களூரு நபர் சிக்கியது எப்படி
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம், ரயில்வே பாதுகாப்பு குறித்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கொடூர சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மீண்டும் ஒரு அத்துமீறல் அரங்கேறியிருப்பது பயணிகளிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
வேலூர் சம்பவத்தின் பின்னணியை உற்று நோக்கினால், அது ஒரு அமைதியான பயணமாகவே தொடங்கியது. ஆனால், அந்த அமைதி காட்பாடி ரயில்வே ஸ்டேஷனை நெருங்கும் வேளையில் தூள் தூளாக சிதைந்துவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 50 வயதான மதிவாணன் என்பவர், ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிற்குப் பாலியல் ரீதியாக அத்துமீறி தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண் துணிச்சலுடன் எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையில், சக பயணிகளின் உதவியுடனும் ரயில்வே போலீசாரின் துரித நடவடிக்கையாலும் அந்த நபர் உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் மதிவாணனை கைது செய்துள்ளனர்.
வேலூர் காட்பாடி ரயிலில் அதிர்ச்சி
குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதற்காகவே இந்த சம்பவத்தை எளிதாக கடந்து போக முடியாது.. காரணம், இதே பகுதியில் இதற்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்தான். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி ஒருவர், கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது ஹேமந்த்ராஜ் என்ற இளைஞன் பெண்கள் பெட்டிக்குள் அத்துமீறி நுழைந்து, அந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அதோடு நிறுத்தாமல், அப்பெண்ணை கடுமையாகச் சித்ரவதை செய்து ஓடும் ரயிலில் இருந்தே கீழே தள்ளிவிட்டான்.
அன்று அந்தப் பெண் உயிருக்கு ஊசலாடிய சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, "பெண்கள் பாதுகாப்பு இனி முழுமையாக உறுதி செய்யப்படும்" என்று ரயில்வே போலீசார் மேடைக்கு மேடை முழங்கினார்கள்.
ரயில்வே பாதுகாப்பு கேள்வி?
ரயில்களில் துப்பாக்கி ஏந்திய பெண் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், காட்பாடியில் இப்போது நடந்துள்ள இந்தச் சம்பவம், அந்த வாக்குறுதிகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பு இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்பதை வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்த இப்போதைய சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
போலீஸ் அறிக்கை
தற்போது கைது குறித்து ரயில்வே போலீசார் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். "பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து புகார் கிடைத்த சில நிமிடங்களிலேயே சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்... ரயில்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை என்றும், இது போன்ற சம்பவங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று போலீஸ் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு எங்கே
இருந்தாலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் நவீன கண்காணிப்பு முறைகள் நடைமுறையில் இருக்கும்போது, 50 வயது நபர் ஒருவர் எப்படித் துணிச்சலாக இத்தகைய அத்துமீறலில் ஈடுபட முடிகிறது என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாக அனைவருக்கும் எழுகிறது..
ஓடும் ரயில்களில் பெண்களின் தனிமை மற்றும் பாதுகாப்பின்மையைச் சமூக விரோதிகள் இன்னும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. அதிகாரிகள் "பாதுகாப்பு பலமாக உள்ளது" என்று சொன்னாலும், பயணிகளின் மனதில் படிந்துள்ள அச்சம் மட்டும் இன்னும் நீங்கவில்லை.
இப்படி அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் பெண் பயணிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications