வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: விரிவான அறிக்கை தர அரசு உத்தரவு
7 நோயாளிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விரிவான அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குறைபாட்டால் நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. உறவினர்களும் குற்றம் சாட்டிய நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் தினசரி 150க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றன. அதிக அளவில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 175 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 145 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டதாகவும், 360 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட தாகவும் உள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக மையத்தில் நேற்று மாலை திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால், வார்டுகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிரமப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்குள் சிகிச்சையில் இருந்த பிரேம், செல்வராஜ், ராஜேஸ்வரி, லீலாவதி ஆகியோர் மரணமடைந்தனர். அதே மருத்துவமனையில் பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவரும் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டினர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மருத்துவமனை தலைவர் செல்வியிடம் நோயாளிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களில் 88, 55, 68, 66 வயதுள்ள நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாமல் மற்ற வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இரண்டு மருத்துவர்கள் உட்பட மொத்தம் 121 பேர் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தால் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மருத்துவமனையில் ஆக்சிஜன் விநி யோக பணிக்கான பராமரிப்புப் பணிகள் மட்டும் நடந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என்றார். 7 பேர் இறப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதனிடையே நோயாளிகள் உயிரிழப்பு குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆய்வு மேற்கொண்டார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications