வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்.. வட தமிழகம் தலையெழுத்தே மாறுது
வேலூர்: வேலூர் விமான நிலையம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது.. வட தமிழக மக்களின் பல ஆண்டுக்கால எதிர்பார்ப்பிற்கு விடை கொடுக்கும் வகையில் வேலூர் விமான நிலையப் பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன. நீண்டகாலமாக செயல்படாமல் உள்ள வேலூர் சிறிய விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும் எல்.முருகன் பதிலளித்துள்ளார். அதை பற்றி இங்கே பார்ப்போம்.
தமிழகத்தை பொறுத்தவரை, மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப விமான நிலையங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாகவே நீடித்து வருகிறது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை என ஒருசில குறிப்பிட்ட நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு விமானப் போக்குவரத்து இயங்கி வரும் சூழலில், மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்த வசதி பரவலாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
வேலூர் விமான நிலையம்
ஒரு பிராந்தியத்தில் அமையும் ஏர்போர்ட் என்பது வெறும் போக்குவரத்து சாதனமாக மட்டும் முடிந்துவிடுவதில்லை, மாறாக, அது அந்த பகுதியின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. அந்தவகையில், வேலூர் விமான நிலைய பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.
நேற்றைய தினம், வேலூர் மாவட்டத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வருகை தந்திருந்தார்.. வேலூர் வடக்கு மண்டலத்தில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடியின் "மனதின் குரல்" நிகழ்ச்சியைக் கேட்டறிந்தார்.
எல்.முருகன் குட் நியூஸ்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன், விமான நிலையத்திற்கான சீரமைப்புப் பணிகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது, இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள சிறு சிறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வேலூர் விமான நிலையம் மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்" என்று உறுதி தந்துள்ளார்.
வேலூர் விமான நிலையத்தின் பின்னணியை பார்த்தால், கடந்த 2017ம் ஆண்டு மீண்டும் உயிர்பெற்றன. மத்திய அரசின் "உடான்" திட்டத்தின் கீழ் சுமார் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டன. இப்போது ஓடுபாதை மற்றும் முனைய கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.
வேலூருக்கு சர்ப்ரைஸ்
முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் மூலம் சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு சேவைகளை வழங்க விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளும் மாபெரும் வளர்ச்சியைச் சந்திக்கும். முக்கியமாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள்.
ஏர்போர்ட் வசதிகள்
இந்த விமான சேவை தொடங்கிவிட்டால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும், வயதானவர்களும் சிரமமில்லாத விரைவு பயணம் சாத்தியமாகும். அதுமட்டுமல்ல, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பரந்து விரிந்துள்ள தோல் பொருட்கள் ஏற்றுமதி தொழில் இதன் மூலம் புதிய வேகத்தைப் பெறும். சர்வதேச வர்த்தகர்களின் நேரடி வருகை அதிகரித்து, அப்பகுதியில் புதிய தொழில் முதலீடுகளும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பெருகும்.
அத்துடன், வி.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் சர்வதேச மாணவர்கள், வேலூர் பொற்கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்லும் ஆன்மீக பயணிகள் என அனைவருக்கும் இந்த விமான நிலையம் மிகச் சிறந்த இணைப்பை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விமான நிலையம் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளது வேலூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது...!!


Click it and Unblock the Notifications
