SIR.. 2002-ம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிவது எப்படி? வேலூர் கலெக்டர் விளக்கம்
வேலூர்: கடந்த 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் விவரங்களை கண்டறிய ஏதுவாக இந்த 5 மையங்களில் 2 கணினிகள் இணைய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளரின் 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் விவரம் தேவைப்பட்டால் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் voters.eci.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து விவரங்களை நிரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று பயிற்சி கூட்டத்தில் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்து வருகிறார்கள். இந்தப் பணிகளுக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 445 பேர் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் எத்தனை படிவங்கள்
அவர்களுக்கு வழங்குவதற்காக அதே அளவில் கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 படிவங்கள், அதாவது 78.09 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று கூறியிருக்கிறது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிய 9 நாட்களில் முக்கால்வாசிக்கும் மேல் படிவங்கள் வழங்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது பலருக்கும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக சந்தேகங்கள் எழுகிறது. அதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மையமும் உள்ளது. அதில் அழைத்து குறைகள் சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெற முடியும்.
வேலூர் கலெக்டர் பேச்சு
வேலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உதவியாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் சுப்புலெட்சுமி பேசுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்
தற்போது அந்த படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடம் இருந்து பெற்று அவற்றை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு உதவியாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட இருக்கிறர்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் கணினி வசதியுடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
விண்ணப்ப படிவம்
வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களிடம் இருந்து பெற்று வரும் பூர்த்தி செய்ய கணக்கீட்டு படிவங்களில் உள்ள விவரங்களை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்ய உதவி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெறும் போது வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் புதிய புகைப்படம் படிவத்தில் இணைக்கலாம். அவர்களிடம் வேறு எந்த ஆவணங்களையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்க வேண்டிய அவசியம் இப்போது கிடையாது.
2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்
கடந்த 2002-ம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் விவரங்களை கண்டறிய ஏதுவாக இந்த 5 மையங்களில் 2 கணினிகள் இணைய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளரின் 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் விவரம் தேவைப்பட்டால் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் voters.eci.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து விவரங்களை நிரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும்" இவ்வாறு கலெக்டர் கூறினார்.












Click it and Unblock the Notifications