கோவை கார் வெடிப்பு.. கவலைபடாத திமுக.. நயன்தாரா குழந்தை பெற்றதை ஆராய்கிறது.. சிவி சண்முகம் அட்டாக்
விழுப்புரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்படாத திமுக அரசு. நயன்தாரா குழந்தை பெற்று கொண்டது பற்றி ஆராய்கிறது என அதிமுக மாநிலங்களை எம்பி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார்.
கோவையில் கடந்த மாதம் பெட்ரோல் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன. இந்நிலையில் கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.
இதில் ஜமோ முபின் என்பவர் இறந்தார். இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தி இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என கருதிய தமிழக அரசு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக, பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை தமிழக அரசும், திமுக தலைவர்களும் மறுத்துள்ளனர். கார் சிலிண்டர் வெடிப்பில் தமிழக அரசும், போலீசாரும் விரைந்து செயல்பட்டனர். இந்த வழக்கில் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறி வருகின்றனர். இது தற்போது ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வார்த்தைபோராக மாறியுள்ளது.

சிவி சண்முகம் பேட்டி
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கலந்துகொண்டு மரம் நட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு சீர்கேடு
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பலமுறை கூறியுள்ளோம். இது செயல்படாத அரசு என்றும் திறமையற்ற அரசு என்றும் தெரிவித்து வருகிறோம். சட்ட ஒழுங்கு சுத்தமாக சீர்கெட்டு உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மவுனம் காத்து வருகிறார். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசுவதற்கு தயங்குகிறார்.

தலைதூக்கும் தீவிரவாதம்
தமிழ்நாட்டில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. இதற்கு கோவை வெடிகுண்டு சம்பவம் என்பது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் மக்களுடைய அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு முரணான பதில்களை கூறி வருகிறது.

நயன்தாரா குழந்தை பெற்றதில் கவனம்
இதை வைத்து அரசியல் செய்து வருகிறது. கோவை வெடிகுண்டு குறித்த அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதை தவிர்த்து அதிதீவிரமாக நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications