''எம்மா இங்கிட்டு வாங்க! குழந்தைகள் சாப்பிடுறாங்க''! ஆர்வக்கோளாறு அதிகாரி மீது உதயநிதி டென்ஷன்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்வக்கோளாறு அதிகாரி ஒருவர் மீது டென்ஷனான நிகழ்வு அங்கு சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடக்கும் அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காலை விழுப்புரம் புறப்பட்டு சென்ற நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விழுப்புரம் சென்றார்.

விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாக அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்யச் சென்றார்.
குழந்தைகளிடம் காலை சாப்பாடு எத்தனை மணிக்கு கொடுக்கிறார்கள், நல்லாயிருக்கிறதா என்றெல்லாம் வினவிய உதயநிதி ஸ்டாலின், அவர்களை தட்டிக்கொடுத்து சாப்பிடுமாறு கூறிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து கையில் ஒரு மைசூர் பாகு ஸ்வீட் பாக்சுடன் பெண் அதிகாரி ஒருவர் அங்கிட்டும் இங்கிட்டும் சுற்றிக் கொண்டிருந்தார். மாணவர்கள் சாப்பாடு தட்டு அருகே அவர் நிற்பதை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென டென்ஷன் ஆனார்.
எம்மா இங்கிட்டு வாங்க, குழந்தைகள் சாப்பிடுறாங்க என உதயநிதி ஸ்டாலின் கூறியதும் அருகில் இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் அந்த பெண் அதிகாரியை இந்தப் பக்கம் வாங்கம்மா என சவுண்டு விட்டனர்.

உடனடியாக சுற்றிக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் அருகே வந்த அந்த பெண் அதிகாரி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டில் ஸ்வீட் வைக்குமாறு கூறி ஐஸ் வைத்தார். இரண்டு மாணவர்களுக்கு வைத்துவிட்டு மீதமுள்ள மாணவ, மாணவிகளுக்கு நீங்களே வைங்க என விட்டுவிட்டார் உதயநிதி.
இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக ஒரு தட்டு எடுத்துவரச்சொல்லி மாணவ, மாணவிகளோடு தாமும் வரிசையில் அமர்ந்து காலை உணவை சுவைத்துப் பார்த்து தரத்தை பரிசோதித்தார்.












Click it and Unblock the Notifications