திருநங்கையுடன் குடித்தனம்... டிக்டாக்கில் ஆடி பாடி கூத்தடித்த சுரேஷ்.. மனைவியிடம் சிக்கினார்!
திருநங்கையுடன் குடித்தனம் நடத்திய கணவனை போலீசார் மனைவியிடம் ஒப்படைத்தனர்
Recommended Video
விழுப்புரம்: திருநங்கையுடன் குடித்தனம் நடத்தி வருவதுடன், அவருடன் சேர்ந்து டிக் டாக்கில் ஆடி, பாடி வீடியோ வெளியிட்ட காணாமல் போன கணவன், மனைவியிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது வழுரெட்டி பகுதி. இங்கு வசித்து வருபவர் ஜெயப்பிரதா. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு சுரேஷ் என்பவருடன் கல்யாணம் ஆனது.
சுரேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அதாவது கல்யாணம் ஆகி 3 வருடத்திலேயே சுரேஷ் திடீரென வீட்டை விட்டு சென்று விட்டார்.

போலீசில் புகார்
எங்கு போனார், ஏன் போனார் என்று எதுவுமே தெரியவில்லை. இதனால் பல இடங்களில் கணவனை தேடி அலைந்த ஜெயப்பிரதா, கடைசியில், விழுப்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் 3 வருஷமாக சுரேஷை தேடி வருகிறார்கள்.

ஜெயப்பிரதா
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் ஆப்பில் சுரேஷை ஜெயப்பிரதாவின் உறவினர்கள் பார்த்துள்ளனர். அதில் சுரேஷ், திருநங்கை ஒருவருடன் ஜோடியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இந்த பதிவை ஜெயப்பிரதாவிடமும் சொந்தக்காரர்கள் காண்பித்துள்ளார்.

திருநங்கை
இதனை அடுத்து டிக்டாக் வீடியோவில் இருந்தது சுரேஷ் தான் என உறுதி செய்யப்பட்ட நிலையில், போலீசாரிடம் இந்த விஷயத்தை சொன்னார் ஜெயப்பிரதா. இதனையடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இறுதியில் அவர்கள் உதவியுடன் டிக் டாக் வீடியோவில் இருப்பது ஓசூரில் இருக்கும் திருநங்கை என்பதை கண்டறிந்தனர்.

தனிக்குடித்தனம்
பிறகு ஓசூருக்கு சென்ற போலீசார் சுரேஷை ரவுண்டு கட்டி பிடித்துவிட்டனர். அந்த திருநங்கையை கல்யாணம் செய்து கொண்டு சுரேஷ் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் வேலை பார்த்தபோது, திருநங்கையை சந்தித்ததாகவும், மனசுக்கு பிடித்து போய்விட கல்யாணமே செய்து கொண்டதாகவும் சுரேஷ் கூறினார். இதனையடுத்து சுரேஷை மீட்ட போலீசார் ஜெயபிரதாவிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

சிக்கினார்
3 வருஷமாக மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, திருநங்கையுடன் குடும்பம் நடத்தி, டிக்டாக்கில் கூத்தடித்து வந்தவர் கையும் களவுமாக சிக்கியது விழுப்புரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications