டைவர்ஸ் பெண்கள் குறி.. நீ ரொம்ப அழகா இருக்க! 20 பெண்கள்..100 சவரன் அபேஸ்! கதிகலங்க வைத்த கார்த்தி!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 20 பெண்களை மணந்து 100 பவுன் நகைகளை அபேஸ் செய்த மோசடி மன்னனை விருதுநகர் காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் பெண்களை ஏமாற்றியது எப்படி? காவல்துறையில் சிக்கியது எப்படி என அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தூர் அருகே வல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி வயது. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமானது. ஆனால் அவரது கணவர் இறந்து விட்ட நிலையில் வல்லம்பட்டியில் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்து உள்ளார்
இந்த நிலையில் தன்னுடைய தாயாரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை கேட்டு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து உள்ளார். இரண்டாவது திருமணத்திற்கு பதிவு செய்த ஒரு சில நாட்களில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் என்பவர் ஜான்சிராணியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

2வது திருமணம்
அப்போது தான் தனியார் வங்கியில் வேலை செய்வதாகவும் தனக்கு முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனதால் தங்களை இரண்டாவதாக திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய ஜான்சிராணி கார்த்திக் ஆரோக்கியராஜிடம் தொடர்ந்து பேசி வந்து உள்ளார். இந்த நிலையில் கார்த்திக் ஆரோக்கியராஜ் ஜான்சிராணியை நேரில் பார்க்க வல்லம்பட்டிக்கு வந்து உள்ளார். அப்போது கார்த்திக் ஆரோக்கியராஜ் ஜான்சிராணிக்கு தாலி செயினை பரிசாக கொடுத்து உள்ளார்.

பெண்களிடம் மோசடி
இந்த நிலையில் ஜான்சிராணி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகைக்கு டாலர் போட்டு தருவதாக கூறி கார்த்திக் ஆரோக்கியராஜ் வாங்கி சென்று உள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் கார்த்திக் ஆரோக்கியராஜ் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த ஜான்சி ராணி அவரை பல இடங்களை தேடி உள்ளார். இந்த நிலையில் கார்த்திக் ஆரோக்கியராஜ் கொடுத்த நகை போலி என தெரிந்த ஜான்சிராணி ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் புகாா்அளித்து உள்ளார்.

நகைகளுடன் மாயம்
ஜான்சி ராணி அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கார்த்திக் ஆரோக்கியராஜ் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இதே மாதிரியான மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த ஏழாயிரம் பண்ணை போலீசார் காவல் ஆய்வாளர் நம்பிராஜான், உதவி ஆய்வாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கார்த்திக் ஆரோக்கியராஜை தேடி வந்தனர்.

100 பவுன் மோசடி
இந்த நிலையில் கார்த்திக் ஆரோக்கியராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற ஏழாயிரம்பண்ணை போலீசார் கார்த்திக் ஆரோக்கியராஜை கைது செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து இருக்கின்றன. இதில் கார்த்திக் ஆரோக்கியராஜ் விருதுநகர், விழுப்புரம், கோவை ,ஈரோடு, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20க்கு மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

திருமண தகவல் மையம்
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காா்த்திக் ஆரோக்கியராஜ் திருமணமாகி விவகாரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களை பற்றி திருமண தகவல் மையத்தில் தகவல்களை சேகரித்து அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகைகளை வாங்கி சென்று மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கார்த்திக் ஆரோக்கியராஜிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏழாயிரம்பண்ணை போலீஸார் மீட்டனர்.

போலீசார் விசாரணை
மேலும் விசாரனைக்கு பின்னர் கார்த்திக் ஆரோக்கியராஜ் ஏழாயிரம் பண்ணை போலீஸார் சாத்தூர் நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் ஏழாயிரம்பண்ணை போலீஸார் கார்த்திக் ஆரோக்கியராஜை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். அப்படி விசாரணை செய்யும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications