காளியம்மா.. மத்திய அரசுக்கு எடுத்து சொல்லும்மா.. விருதுநகரில் வீறு கொண்டு எழுந்த காங்கிரஸ்
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, சுங்ககட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது.
மேலும் சுங்கச்சாவடி கட்டணமும் ஏற்றம் கண்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தானாகவே உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
முதற்கட்டமாக சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை கண்டித்து இந்தியா முழுவதும் சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். மேலும் மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் முன்பு சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

1008 தேங்காய் உடைப்பு
உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும் 1008 தேங்காய் உடைத்து நூதன முறையில் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை காட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். சாத்தூர் காங்கிரஸ் நகரதலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் நகர காங்கிரஸ் உறுப்பினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோஷமிட்ட காங்கிரஸ்
இவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், சுங்கச்சாவடி கட்டண விலையேற்றத்தை கண்டித்து கோஷமிட்டனர். இந்த விலை உயர்வு, கட்டண அதிகரிப்பு ஆகியவற்றை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications