ஆசையா வளர்த்தவருக்கே ஆப்பு வைத்த பாம்பு.. துப்பாக்கியால் சுட்ட போலீசார்..அமெரிக்காவில் திக் திக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆசை ஆசையாய் வளர்த்த செல்ல பாம்பே அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லமாக நாய், பூனை வளர்க்கப்படுவதை நம்ம ஊரில் எங்கும் காணலாம். ஏன், நாமே கூட அதை வளர்த்து வருவோம். இதே போல தான் வெளிநாடுகளில் யானை, சிங்கம், குரங்கு ஆகிய வன விலங்குகளைக் கூட வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
இதை நாம் அவ்வப்போது செய்திகளில் கேட்டறிந்தது உண்டு. ஆனால் பாம்பை செல்லப்பிரணியாக வளர்த்து வருவதை அதிகம் கேள்விப்பட்டது இல்லை என்றே சொல்லலாம்.

பாம்பு பிரியர்
நம்ம ஊரில் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு. பாம்பு என சொல்லக்கேட்டாலே பலருக்கும் உடல் சிலிர்க்கும். அந்த அளவுக்கு பாம்பு மீது ஒரு அச்சம் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில், பாம்பை செல்லப்பிராணியாக ஒருவர் அமெரிக்காவில் வளர்த்து வந்துள்ளார். இது நமக்கு சற்று ஆச்சர்யமாகவே இருக்கும். அதுவும் ஒன்று இரண்டல்ல... விதவிதமான வகைகளில் எண்ணற்ற பாம்புகளை பெனிசில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் வளர்த்து வந்தார்.

ஆப்பு வைத்த பாம்பு
இந்த நிலையில், அந்த நபர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த 15 அடி நீள பாம்பை போலீசாரை வரவழைத்து துப்பாகியால் சுட்டுள்ளார். பாம்பு பிரியரான அவர் எதற்காக தான் வளர்த்த பாம்பையே துப்பாக்கியால் சுடவேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள். . ஆம் அவர் ஆசையாய் வளர்த்த 15 அடி நீள பாம்பு அவரது கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றதால் தான் இப்படி செய்துள்ளார். தற்போது அந்த நபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தான் ஆசையாய் வளர்த்த பாம்பே அவருக்கு கடைசியாக ஆப்பு அடித்ததால், தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்த தகவலை அங்குள்ள போலீசார் கூறியதாவது:-

கழுத்தை இறுக்கிய பாம்பு
இளைஞர் ஒருவர் வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்று பார்த்தோம். அப்போது, இளைஞரின் கழுத்தை 15 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று இறுக்கமாக சுற்றிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு நிமிடம் திகைத்து போனோம். சுமார் 15 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு மிகவும் தடினமாக இருந்தது. பாம்பின் தலை இளைஞரின் கழுத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. இதனால் சமயோசிதமாக சிந்தித்து பாம்பின் தலையை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டோம். ஆனாலும் பாம்பு உடனடியாக இறக்கவில்லை. வலியால் துடித்த அந்த பாம்பு தனது பிடியை விலக்கி இளைஞரின் கழுத்தில் இருந்து விலகிச்சென்றது. உடனடியாக பாம்பின் உரிமையாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். அருகில் உள்ள மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார். என்று கூறினர்.

திகில் படம் பார்ப்பது போல..
மேலும் இந்த சம்பவத்தை விவரித்த போலீசார், ஒரு திகில் படம் பார்த்தது போலத்தான் இந்த நிகழ்வு இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என இருந்தது. நாங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக போலீஸ் துறையில் இருக்கிறோம். ஆனால், எங்கள் அனுபவத்தில் இதுபோன்ற சம்பவத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த பல பாம்புகளை பார்த்தோம். கழுத்தை இறுக்கி உயிரை காவு வாங்க பார்த்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தவும் தங்களுக்கு திட்டம் எதுவும் இல்லை"என்றனர்.












Click it and Unblock the Notifications