மாபெரும் சாதனை..வெற்றிகரமாக முடிந்த முதல் ஸ்பேஸ் சுற்றுலா..பத்திரமாக தரையிறங்கிய யூனிட்டி22 விண்கலம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற பிரிட்டன் கோடீஸ்வர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேரும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினர்.
Recommended Video
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர். ஆனால், இவை அனைத்தும் சோதனைக்காகவே மேற்கொள்ளப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பல உலகெங்கும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை முயன்று வருகிறது.

ஸ்பேஸ் சுற்றுலா
இதில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான விர்ஜின் கேலடிக் என்ற நிறுவனம் இது தொடர்பாகத் தொடர்ந்து சோதனைகளைச் செய்து வருகிறது. இதுவரை 21 விண்கலங்களைச் சோதனை முறையில் இந்நிறுவனம் செலுத்தியுள்ளது.

முதல் பயணம்
இந்நிலையில், விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 விண்கலத்தில் இன்று முதல் முறையாக முழு அளவிலான விண்வெளி குழு விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இதில் இதில் விர்ஜின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன், இரண்டு பைலட்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லாவும் இடம்பெற்றிருந்தார்.

பூமி திரும்பினர்
நியூ மெக்சிகோவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் அமெரிக்க ஏவுதளத்திலிருந்து ஈஸ்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு (8pm IST) விண்வெளிக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது ஈஸ்டன் நேரப்படி காலை 11.40 மணிக்குப் பத்திரமாகத் தரையிறங்கினர். இது அறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது.

400 பேர்
இதுபோன்ற ஸ்பேஸ் சுற்றுலா வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் இருந்து இதுவரை 400க்கும் மேற்பட்டோர் ஸ்பேஸ் சுற்றுலா செல்ல விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி சென்றனர்
விண்வெளிக்குச் சென்ற குழு இருந்த யூனிட்டி 22 விண்கலம் விண்கலம் இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து விண்கலம் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து மேலும் சில ஆயிரம் அடி தூரம் விண்கலத்தில் இவர்கள் பயணித்தனர். இருப்பினும் இது முழுமையான விண்வெளி பயணம் இல்லை. இவர்கள் , 85-90 கிமீ உயரம் வரை மட்டும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications