Cognizantக்கு அமெரிக்காவில் தடை! டிரம்ப் அதிரடி உத்தரவு! மொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் கலக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் விசா மோசடி தடுப்பு நடவடிக்கையாக, பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட்டின் கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான முதற்கட்ட செயல்முறையை (PERM) தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களிடையேயும் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க தொழிலாளர் துறை நடத்திய மோசடி குறித்த விசாரணைக்கு பிறகு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் H-1B மற்றும் PERM விசா திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட நாடு தழுவிய விசாரணை மற்றும் வெள்ளை மாளிகையின் மோசடி தடுப்பு பிரிவின் கூட்டு நடவடிக்கையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் துறை தனது விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை, காக்னிசன்ட் நிறுவனம் தனது வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்குவதற்கான புதிய PERM விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காக்னிசன்ட் நிறுவனத்துடன் சேர்ந்து, கிளவ்டெரா (Cloudera) என்ற மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்தின் PERM ஃபைலிங்ஸும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தடைவிதிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்கள் என்றாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரீன் கார்டு விண்ணப்ப செயல்பாடு
அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கிரீன் கார்டு ஸ்பான்சர் செய்ய வேண்டுமெனில் முதலில் அந்நாட்டின் தொழிலாளர் துறையிடம் PERM அனுமதியை பெற வேண்டும். இந்த வேலைக்கு தகுதியான அமெரிக்க ஊழியர்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டு ஊழியரை நியமிப்பதால் உள்ளூர் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்படாது என்பதையும் நிறுவனம் நிரூபிக்க வேண்டும். இதற்கு பெயர்தான் கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான முதற்கட்ட செயல்முறை ஆகும்.
என்ன பிரச்சனை?
ஆனால் இதையெல்லாம் செய்ய காக்னிசென்ட் தவறிவிட்டது. எனவேதான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்டிபெக்டர் அந்தோணி டி எஸ்போசிட்மோ தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம். உண்மைகளையும் நிதி ஆதாரங்களையும் நாங்கள் பின்தொடர்கிறோம். தவறு செய்தவர்களுக்கு எதிராக கைவிலங்கு காத்திருக்கிறது" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்திய நிறுவனங்கள் கலக்கம்
இப்போது பிரச்சனை என்னவெனில், இந்திய ஐடி நிறுவனங்களும் பாதிக்கப்படலாம் என்கிற அச்சுறுத்தல்தான். காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவில் அதிக அளவில் H-1B விசாக்களை பயன்படுத்தும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால்.. இதே விசா திட்டங்களை நம்பி இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களான TCS, Infosys, Wipro, HCL ஆகியவற்றின் மீதும் அமெரிக்க அரசின் கண்காணிப்பு தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
