டிரம்பிற்கு நோபல் பரிசு.. நேரில் வழங்கினார் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மச்சோடோ.. ஆனா ஒரு ட்விஸ்ட்
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கினார். அதை டிரம்பும் வாங்கிக் கொண்டதாகவும் அந்தப் பதக்கம் இப்போது டிரம்ப் வசமே இருப்பதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கப் படைகள் திடீரென வெனிசுலாவில் இறங்கியது. அமெரிக்காவுக்குப் போதைப் பொருட்கள் வர வெனிசுலா அதிபரே முக்கிய காரணம் என்று டிரம்ப் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், திடீரென அமெரிக்கப் படைகள் வெனிசுலாவில் களமிறங்க உத்தரவிட்டார். வெனிசுலா அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.

வெனிசுலா தலைவர்கள்
அவர்கள் இப்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. இப்போது வெனிசுலாவை அந்நாட்டின் துணை அதிபர் வழிநடத்துகிறார். இதற்கிடையே டிரம்ப் நடவடிக்கைக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ நன்றி தெரிவித்திருந்தார். மேலும், அவருக்கு 2025ல் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருந்த நிலையில், அதை டிரம்பிற்கு வழங்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
டிரம்ப் லாபி
கடந்தாண்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதில் பெரியளவில் லாபி செய்தார். தான் பல போர்களை நிறுத்தியுள்ளதாக வெளிப்படையாகவே கூறி வந்தார். இதனால் நோபல் பரிசு எனக்கு வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார். ஆனால், அவருக்கு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்குவதாகச் சொன்னது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
நோபல் பரிசை வழங்கினார்
இந்தச் சூழலில் தான் அமெரிக்கா சென்ற மச்சாடோ அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்தார். அப்போது மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட நோபல் விருதை டிரம்பிடம் அளித்தார்.. இதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நோபல் பரிசு இப்போது டிரம்ப் வசமே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நோபல் பரிசைப் பெற்றதை டிரம்பும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "நான் செய்த பணிக்காக மரியா இந்த நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா" என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மச்சாடோ மேலும் கூறுகையில், "அமெரிக்க அதிபருக்கு நோபல் அமைதிப் பரிசை வழங்கினேன்.. எங்கள் சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமாக நான் எனது விருதை வழங்கியுள்ளேன்" என்றார். டிரம்ப்- மச்சாடோ சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
நோபல் குழு
அதேநேரம் நோபல் பரிசை ஒருவருக்கு வழங்கினால் அதை மாற்ற முடியாது என நோபல் குழு இதற்கு முன்பே விளக்கமளித்திருந்தது. இது தொடர்பாக நோபல் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஒரு நோபல் பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அதுவே நிரந்தரமானது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது மச்சாடோ என்ன தான் டிரம்பிற்கு தனது அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுத்திருந்தாலும் கூட அதிகாரப்பூர்வமாக அது கருத்தில் கொள்ளப்படாது. 2025 அமைதிக்கான நோபல் பரிசை வென்றவராக மச்சாடோவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
