எச்சை துப்பியது ஒரு குற்றமா.. 36 வருடத்திற்கு முன் நடந்த கொலை வழக்கில் சிக்கிய நபர்.. எப்படி?
வாஷிங்டன்: சும்மா சாதாரணமாகத் தெருவில் எச்சைத் துப்பிய ஒருவர் 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த எச்சிலில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ ஆதாரமும் கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ ஆதாரமும் ஒரே மாதிரி இருந்ததால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பமும் அறிவியல் முன்னேற்றமும் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. குறிப்பாகக் குற்றப் புலனாய்வு பிரிவில் இது நமக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது.

அப்படி தான் 36 ஆண்டுகள் பழமையான ஒரு வழக்கில் இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியலும் தொழில்நுட்பமும் விசாரணைக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.
படுகொலை: கடந்த 1988ம் ஆண்டில் மே 27ம் தேதி அமெரிக்காவின் பாஸ்டனின் ராக்ஸ்பரி பகுதியில் உள்ள டெய்லர் என்ற 25 வயது பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதாவது அன்றைய தினம் டெய்லரின் தாய் அவருக்குக் கால் செய்துள்ளார். போனை எடுத்த டெய்லரின் 3 வயது மகள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பதாகவும் அவரை எழுப்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
எழுப்ப முடியவில்லை என்று அந்த குழந்தை சொன்னது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தான் வீட்டில் டெய்லரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 முறை கழுத்து, தலை, மார்பில் குத்தி டெய்லர் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது.
குற்றவாளி கைது: இந்த கொடூர கொலையைச் செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் அப்போதே தீவிரமாக முயன்றுள்ளனர். இருப்பினும், குற்றவாளியைக் கைது செய்ய முடியவில்லை. இதனால் அந்த வழக்கைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது சுமார் 36 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தொழில்நுட்பமும் அறிவியலும் குற்றவாளியைக் கைது செய்ய உதவியிருக்கிறது.
அப்போதே ஜேம்ஸ் ஹோலோமன் என்ற நபர் போலீசாரின் சந்தேக பட்டியலில் இருந்துள்ளார். அவரது காசோலை ஒன்று டெய்லரின் சடலத்திற்கு அருகே இருந்துள்ளது. இருப்பினும், அதைத் தாண்டி இந்த கேஸில் அவரை உள்ளே கொண்டு வர முடியவில்லை. இதனால் ஜேம்ஸ் ஹோலோமனை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
டிஎன்ஏ மாதிரிகள்: இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அவர் சாலையில் ஏதோ ஒரு இடத்தில் எச்சைத் துப்பியுள்ளார். உடனே போலீசார் அந்த எச்சையில் இருந்து ஹோலோமனின் டிஎன்ஏ ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். அதைக் கொலை செய்யப்பட்ட பெண்ணான டெய்லரின் விரல் நகங்கள், ஆடை, அருகே இருந்த சிகரெட்டில் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளுடன் சோதித்து உள்ளனர்.
அதில் இரண்டு மாதிரிகளும் ஒத்துப் போய் இருக்கிறது. இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் ஹோலோமன் கைது செய்யப்பட்டார். ஹோலோமன் மீது இதுவரை எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லையாம். இருப்பினும், இந்த டிஎன்ஏ ஆதாரத்தின் அடிப்படையில் செப். 19ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் கொலை செய்தார், அதை அவர் ஒப்புக் கொண்டாரா இல்லையா என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தொழில்நுட்ப உதவி: ஹோலோமன் கைது 36 வருடப் பழமையான கொடூர கொலைக் குற்றத்திற்கான தீர்வை அளித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த காலத்தில் குற்றவாளியைப் பிடிக்கத் தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கரேன் டெய்லரின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரிந்துவிட்டது. இனி அவரது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications